கூட்டணியிலிருந்து காங்கிரஸை துரத்திவிடும் லாலு பிரசாத்... கூட்டணி வேண்டும் என்று கெஞ்சும் காங்கிரஸ்..!

By Asianet TamilFirst Published Oct 28, 2021, 8:49 AM IST
Highlights

காங்கிரசுடன் வைத்த கூட்டணியால், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு என்ன லாபம் கிடைத்தது? தேர்தலில் தோல்விகளை சந்தித்ததுதான் மிச்சம். இடைத்தேர்தல் நடக்கும் இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால், அதில் டெபாசிட் கூட கிடைக்காது” என்று காங்கிரஸை காட்டமாக விமர்சித்தார் லாலு. 
 

பீஹாரில் காங்கிரஸ் கட்சியை உதறித்தள்ள ராஷ்ட்ரிய ஜனதாதளம் முடிவு செய்துவிட்ட நிலையில், கூட்டணி உடைவதைத் தடுக்க லாலு பிரசாத் யாதவுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவ்ர் சோனியா காந்தி தொலைபேசி மூலம் பேசியிருக்கிறார். 

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியைப் போன்றதுதான் பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) - காங்கிரஸ் கூட்டணி. இந்தக் கூட்டணி கடந்த 17 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பீகாரில் கூட்டணிக்கு ஆர்.ஜே.டி. தலைமை வகிக்க, அதில் காங்கிரஸ் நீடித்து வருகிறது. ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஊழல் வழக்கில் தண்டனை பெற்று 3 ஆண்டு கால சிறைவாசத்தையும், பின்னர் மருத்துவச் சிகிச்சையைமும் முடித்துவிட்டு பீகார் அரசியலுக்குத் திரும்பியிருக்கிறார்.

கடந்த ஆண்டு பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஆர்.ஜே.டி.-காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நூழிலையில் அந்த வாய்ப்பை இழந்தது ஆர்ஜெடி. இந்தத் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று ஆர்.ஜே.டி. கட்சியினர் பேச ஆரம்பித்தனர். தேர்தலில் ஆர்.ஜே.டி.யை நெருக்கி 70 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ், வெறும் 19 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றது. இதுவே ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு காரணமாகவும் அமைந்தது. இருந்தாலும் தேசிய அரசியலை மையப்படுத்தி காங்கிரஸ்-ஆர்.ஜே.டி. கூட்டணி தொடர்கிறது.

இந்நிலையில் பீஹாரில் தாராப்பூர், குஷேஷ்வர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பரில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் இரு தொகுதிகளிலுமே ஆர்.ஜே.டி. போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஒரு தொகுதியை தங்களுக்கு வழங்குமாறு காங்கிரஸ் கேட்ட நிலையில், ஆர்.ஜே.டி. கைவிரித்துவிட்டது. இதனால், ஆத்திரமடைந்த காங்கிரஸ், இரண்டு தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவித்தது. மேலும், காங்கிரஸ் கட்சியை லாலு பிரசாத் யாதவ் கழற்றிவிட்டதால் பீகார் காங்கிரஸார் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதனால், ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத்தை காங்கிரஸார் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பதிலளித்த லாலு, “காங்கிரசுடன் வைத்த கூட்டணியால், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு என்ன லாபம் கிடைத்தது? தேர்தலில் தோல்விகளை சந்தித்ததுதான் மிச்சம். இடைத்தேர்தல் நடக்கும் இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால், அதில் டெபாசிட் கூட கிடைக்காது” என்று காங்கிரஸை காட்டமாக விமர்சித்தார். 

பீகாரில் காங்கிரஸ்-ஆர்.ஜே.டி. கூட்டணி ஆட்டம் காண தொடங்கிய நிலையில், அக்கட்சியுடன் கூட்டணி தொடர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா விரும்புகிறார். இதனையடுத்து லாலுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு சோனியா பேசினார். அப்போது லாலுவின் உடல்நலம் குறித்தும் கூட்டணியை நீடிப்பது பற்றியும் சோனியா காந்தி பேசியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் பேரியக்கத்துக்கு வந்த நிலைமையைப் பாருங்க!
 

click me!