ஓடி ஒளியும் கேடிஆர்.. உங்கள் டாடி மோடி கை விட்டுடாரா..?? செம்மயா கலாய்த்த தங்க தமிழ் செல்வன்.

By Ezhilarasan BabuFirst Published Dec 21, 2021, 12:17 PM IST
Highlights

அதில் எந்த அரசியல்வாதிகளும், எந்த அரசியலும் தலையிட முடியாது. அதற்கு நாங்கள் கருத்துகூற முடியாது. ஆனால் ராஜேந்திர பாலாஜி உண்மையிலேயே " மோடி எங்கள் டாடி" என்று சொன்னவர். 

மோசடி வழக்கில் ஓடி ஒளியும் முன்னாள் அமைச்சர் கே. டி ராஜேந்திர பாலாஜியை ஏன் மோடி காப்பாற்றவில்லை என திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜேந்திர பாலாஜி "மோடி எங்கள் டாடி" என கூறி வந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

கே.டி ராஜேந்திர பாலாஜி தவறு செய்துள்ளதால் அவர் தப்பிக்க முடியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார். செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் இபிஎஸ்சின் இரட்டை தலைமையின் கீழ் அதிமுக இயங்கி வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு செல்லும் முன் அதிமுக அரசை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைத்து விட்டுச் சென்றார் சசிகலா. அவர் செய்த அந்த செயல் பிறகு அவரது அரசியல் வாழ்க்கைக்கே சூனியமாக மாறிப்போனது. சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கட்சியிலிருந்து துடைத்தெரிந்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், அப்போது அதிமுகவின் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜி பேசிய பேச்சுகள் ஒவ்வொன்றும் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அம்மா என்ற ஆளுமை இல்லாதபோது " மோடி தான் எங்கள் டாடி" என்று அவர் பேசியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுக அமைச்சராக இருந்தாளும் பகிரங்கமாக பாஜகவுக்கு ஆதரவாக அவர் பேட்டி கொடுத்து வந்தார். அதிலும் குறிப்பாக அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த  மு.க ஸ்டாலின் அவர்களை மிகக் கடுமையாகவும், ஒருமையிலும் பேசிவந்தார். தமிழ்நாட்டில் நீங்கள் பேசும் நாத்திகம் எல்லாம் எடுபடாது, உங்கள் ஐயா கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தவர். நீ முதலமைச்சர் ஆகவே முடியவே முடியாது அவனே இவனே என்று அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலின் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். ஒரு கட்டத்தில் வெள்ளை உடையில் வலம் வந்த அவர் திடீரென மஞ்சள் உடைக்கு மாறினார். முழு பாஜக ஆர்எஸ்எஸ் தொண்டனாகவே தன்னை காட்டிக் கொண்டார். இது பாஜகவில் இருப்பவர்களுக்கே பெரும் நம்ப முடியாத அதிர்ச்சியாக இருந்தது.  

இவரைப்போலவே முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், ஜெயக்குமார் போன்றவர்கள் திமுகவை விமர்சித்தாலும் அது பெரிய அளவிற்கு கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் கே.டி ராஜேந்திர பாலாஜி பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் திமுகவினரை அணுஅணுவாக அவமானப்படுத்தும் வகையில் இருந்தது. நிச்சயம் திமுக ஆட்சி அமைத்தால் ராஜேந்திர பாலாஜி சிறைக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்று  திமுகவினர் மத்தியில் கோபம் கொந்தளித்து கொண்டிருந்தது.ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் ராஜேந்திர பாலாஜியை அழைத்து இப்படி பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்தும் அவர் கட்டப்படவில்லை.  திமுக தலைவர் ஸ்டாலினை வசையால் வறுத்தெடுத்து வந்தார். ஸ்டாலின் நீ ஜெயிக்க முடியாது. உனக்கு ஜாதகத்தில் கட்டம் சரியில்லை என்று நக்கல் அடித்து வந்த நிலையில், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் திமுக ஆட்சியை கைப்பற்றியது. அதுவரை அமைச்சர் என்ற கெத்தில் கொப்பளித்து வந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடம் தெரியாமல் பதுங்கினார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

அதில், ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது சில நேரங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்த சில தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளேன். அதற்கு வருத்தம் அடைந்து அரசியல் பக்குவமாக தற்போது செயல்பட்டு வருகிறேன். ஓபிஎஸ், இபிஎஸ் என்ற தலைமையிலான கழகத்துக்கு என்னை அர்ப்பணித்து உள்ளேன் அவர் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பது போல அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கிடையில் ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 3 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது நடந்து வந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ரத்து செய்தது.  இதையடுத்து தான் கைது செய்யப்படக் கூடும் என்பதால் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் அவரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவரை பிடிக்க தனிப்படைகள் திருச்சி, சென்னை, தென்காசி, பெங்களூர் பல இடங்களுக்கு விரைந்துள்ளனர்.

போலீசார் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி அவரை தேடி வரும் நிலையில் அவர் கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் தான் எங்கேயோ பதுங்கி இருக்கிறார். அங்கிருந்தபடியே தனது டெல்லி சோர்ஸ் மூலம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில் அதேபோல மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக மாஜி அமைச்சர்களில் எஸ்.பி வேலுமணிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும்தான் அதிகமான முட்டல் மோதல்கள் இருந்து வந்தது. ரெய்டு விடப்பட்ட அமைச்சர்களில் அவர்தான் முதலில் கைது செய்யப்படுவார் என ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் எல்லோரையும் விட்டுவிட்டு ராஜேந்திரன் பாலாஜியை இப்போது போலீஸ் பாய்ந்து பாய்ந்து தேடுகிறது. காரணம் அந்த அளவுக்கு அவர் பேசிய பேச்சுதான். வாயே விணையாகிவிட்டது என்று அவரை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி கைது செய்ய போலீஸ் தேடுகிறதே என ஓ. பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எதுவும் பேச முடியாது என முடித்துக் கொண்டார்.

அதேநேரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்கிறார் என்று யார் சொன்னது? அவர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றார். வழக்கமாக தங்களது முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போது கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் அதிமுக, முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி விவகாரத்தில் அடக்கி வாசிப்பதில் மூலமே நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறது. " மோடி எங்கள் டாடி" எல்லாத்தையும் அவர் பார்த்துக் கொள்வார் என கூறிவந்த ராஜேந்திரபாலாஜி உச்சநீதிமன்றத்தின் மூலம் எப்படியும் முன்ஜாமீன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் திமுக தேனி மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் " மோடி எங்கள் டாடி"  என்று சொன்ன ராஜேந்திரபாலாஜியை இன்னும் மோடி  காப்பாற்றவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.  இது தொடர்பாக அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியின் விபரம் பின்வருமாறு :-  ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். அதற்கு முன்ஜாமீன் கேட்டு அவர் நீதிமன்றத்தில் செய்த மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. 

உண்மையிலேயே தான் நிரபராதி என்றால் நேரடியாக ராஜேந்திரபாலாஜி விசாரணைக்கு ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் அவர் ஓடி மறைகிறார். எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களை மிகவும் மோசமாக விமர்சித்தார் என்பதற்காக அவரை பழிவாங்கும் நோக்கில் நாங்கள் செயல்படவில்லை. அவர் செய்த தவறுக்கு தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ராஜேந்திரபாலாஜி பொறுத்தவரையில் அவர் தவறு செய்திருக்கிறார். அதனால்தான் அவர் தலைமறைவாகி இருக்கிறார். அதேபோல் திமுகவை எதிர்த்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வந்தவர்களை திமுக கைது செய்திருக்கிறது, ஆனால் அவர்களை பாஜக காப்பாற்றுவதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாகவும் விமர்சனங்கள் இருக்கிறதே என  நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தங்கத்தமிழ்செல்வன், ராஜேந்திர பாலாஜி மிகத்தீவிரமாக தன்னை மோடி ஆதரவாளராகவும் பாஜக ஆதரவாளராகவும் காண்பித்து கொண்டவர். தன்னுடைய சட்டையை காவியாகவே மாற்றிக் கொண்டவர். அதேபோல பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கிறது என்றால் அது நீதிமன்றம் கொடுக்கிற உத்தரவு.

அதில் எந்த அரசியல்வாதிகளும், எந்த அரசியலும் தலையிட முடியாது. அதற்கு நாங்கள் கருத்துகூற முடியாது. ஆனால் ராஜேந்திர பாலாஜி உண்மையிலேயே " மோடி எங்கள் டாடி" என்று சொன்னவர்.  உண்மையிலேயே " மோடி அவரின் டாடியாக "  இருந்திருந்தால் அவர்களிடம் சொல்லி ஜாமீன் வாங்க வேண்டியது தானே? ஏன் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை? அவர் தவறு செய்திருக்கிறார், அவர் மீது தவறு இருக்கிறது என்பது தெரிந்ததால்தான் அவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மொத்தத்தில் பாஜக தரப்பு கைவிட்டதா? அதிமுக தரப்பு கை விட்டதா? என்பதை விட அவர் தவறு செய்திருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை.  அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்கிறார். அவர் ஒரு (பேச்சிலர்) திருமணம் செய்து கொள்ளாதவர். ஒரு சாதாரண நிலையில் இருந்தவர் இன்று பல்லாயிரம் கோடியை கையில் வைத்திருந்தால் யார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். இதெல்லாம் அடுத்தடுத்து வரப்போகிறது என தங்கதமிழ்செல்வன் விமர்சித்துள்ளார். 
 

click me!