
குழந்தை திருமணங்களை தடுக்க பெண்களின் திருமண வயது 16-ல் இருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்தியாவில் 25 சதவீதம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சட்ட மசோதா நடப்பு கூட்டத்தொடரிலேயே நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை பல்வேறு அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகள் வரவேற்றுள்ளன. அதேவேளையில் ஒரு சில மத அடிப்படையிலான அமைப்புகள், அரசியல் கட்சிகள் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முடிவுக்கு மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்றைய தினம் மனிதநேய ஜனநாயக கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இணையும் விழா மற்றும் ஜமாத் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 55 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக வெளியுறவு துறை அமைச்சரிடம் பேசி, மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தினார். தமிழ்நாடு மீனவர்கள் வாழ்வாதார பிரச்சினையை தீர்க்க மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தி ஒன்றிய அரசு வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் மசோதா நிறைவேற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. 1978 ஆம் ஆண்டு பெண்களுக்கான திருமண வயது 16 லிருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் குழந்தை திருமணங்களை தடுக்க முடியும் என கூறப்பட்டது. இந்தியாவில் 23 சதவிகிதம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் 18 வயதில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முடியும், 18 வயதில் சொத்துக்களை வாங்க முடியும் ஆனால், பெண்கள் தங்களது கணவரை தேர்ந்தெடுக்கும் வயது 21 ஆக அறிவித்திருப்பது பெண்களுக்கான அநீதியாகும். திருமண வயதை 21 ஆக உயர்த்துவதால், சிசு உயிரிழப்புகளை தடுக்க முடியும், பிரசவத்தின் போது இளம்பெண்கள் உயிரிழப்பை தடுக்க முடியும் என மத்திய அரசு கூறும் காரணங்கள் ஏற்கக் கூடியதாக இல்லை. இளம் பெண்களுக்கு சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு பதிலாக அந்த கடமையில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக மத்திய அரசு பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். பெண்களின் திருமண வயதை உயர்த்திய மசோதாவை நிறைவேற்றவிடாமல் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறினார்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறி உள்ளது. ஆதார் அட்டையை எல்லா வகையிலும் பயன்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. அந்த தீர்ப்புக்கு எதிராக இந்த மசோதா தேர்தல் சீர்திருத்தம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது கிராமப்புற மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குரிமையை பறிப்பதற்கு வழி வகுக்கும். மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றவிடாமல் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இருந்து வாக்குரிமையைப் பறிக்கக்கூடிய மோடி அரசாங்கத்தின் இந்த சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா கூறினார். அதிமுகவிலிருந்து நிலோபர் கபில், அன்வர் ராஜா நீக்கப்பட்டது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜகவின் கிளை கட்சியாக அதிமுக மாறிவிட்ட நிலையில் அக்கட்சியில் இருந்து இஸ்லாமியர்கள் நீக்கப்படுவது அதிர்ச்சிகரமானது இல்லை என்றார்.