அதிமுக பாஜக பிரச்சனையை சரி செய்ய பேச்சுவார்த்தை ஏற்கனவே மத்தியில் முடிவு எடுக்கக் கூடிய நிலையில் உள்ள தலைமை தொடங்கிவிட்டது என்று தகவல்கள் வருவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனை- விவசாயிகள் பாதிப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில் புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியார்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். இதனை வலுப்படுத்தும் வகையில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சி சார்பில் தெரு முனை பிரச்சாரம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
திமுகவை பொருத்தவரை ஆட்சியில் இல்லாத போது காவிரி பிரச்சினையை முன்னிறுத்தி போரட்டம் நடத்துவார்கள். இப்போது காவிரி மேலாண்மை தெரிவித்துள்ள அளவு நீரை கூட வாங்கி தர முடியவில்லை. இந்த பிரச்சினை குறித்து முதலமைச்சர் மவுனமாக உள்ளார், ஒரு அறிக்கை கூடிய வெளியிடவில்லையென தெரிவித்தார்.
பாஜக கூட்டணியில் புதிய தமிழகம்
கர்நாடகவில் பாஜக அரசை மாற்ற வேண்டும் என்று கர்நாடகத்தில் சென்று திமுகவினர் பிரச்சாரம் செய்தார்கள். ஆட்சி மாற்றத்திற்கு பின் தமிழகத்தின் உரிமையை காங்கிரஸ் கட்சி பறிப்பதாக உள்ளது.ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலை இல்லாத போது ஒரு நிலை என்ற இரட்டை நிலை போக்கை திமுக கைவிட வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியா முழுவதும் பல கட்சிகளை உள்ளடக்கியது. புதிய தமிழகம் கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுகிறது.பாஜக-அதிமுக கூட்டணி முறிவு சற்றும் எதிர்பார்க்காமல் நடந்தது. இது நிரந்தரமானது அல்ல சரி செய்யப்படக் கூடியது.
பேச்சுவார்த்தை தொடங்கியாச்சு
பாஜக,அதிமுக மாநில தலைவர்களுக்கு இடையில் நடந்த கருத்து மோதல். இது ஒரு சின்ன கருத்து மோதலால் நடந்த முடிவு இது. கொள்கை ரீதியான முடிவு அல்ல. நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சி மேலிடம் தலையிட்டு நல்ல முடிவை கொண்டு வரும். இந்த மோதல் பிரச்சனையை சரி செய்ய பேச்சு வார்த்தை ஏற்கனவே மத்திய தலைமை தொடங்கி விட்டது என்று தகவல்கள் வருகிறது.
தேவைப்பட்டால் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் புதிய தமிழகம் கட்சி முடிவினை அறிவிக்கும்.2019, 2021 இல் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி இயங்கியது. இது தொடரும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்.
சிறிய பிரச்சனை தான்
சிறிய சிறிய அளவில் இருந்த விரிசல் அந்த நேரத்தில் கவனித்து இருந்தால் சரி செய்திருக்க முடியும். இப்போதும் ஒன்றும் பெரிய பிரச்சினையாகி விடவில்லை. சரி செய்ய முடியாத பிரச்சினை ஒன்றும் இல்லை. வார்த்தை போரால் ஏற்பட்ட பிரச்சினைக்காக தேசிய ஜனநாயக கூட்டணி உடைந்து விடும் என்று கருதவில்லை. வெற்றி பெறக்கூடிய சூழலில் பிரிவு ஏற்பட வேண்டுமா என்று கேள்வி எழுகிறது. புதிய தமிழகம் கட்சி சார்பில் டெல்லியில் முக்கிய தலைவர்களிடம் தொடர்பு கொண்டு இந்த கூட்டணி சேர்ந்து இருக்க வேண்டும் என்று பேசி உள்ளதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.