இது மன்னிக்க முடியாத குற்றம்! இதுவா இயற்கைவளப் பாதுகாப்பு? தமிழக அரசை லெப்ட் ரைட் வாங்கிய அன்புமணி..!

By vinoth kumar  |  First Published May 13, 2023, 1:14 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கிரானைட், கருங்கல் உள்ளிட்ட கனிமங்களின் கொள்ளை குறித்த தகவல்களும், அதற்கு அதிகாரிகளே உடந்தையாக இருப்பது குறித்த உண்மைகளும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம். 


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கிரானைட் கொள்ளை மற்றும் அதற்கு ஆதரவாக செயல்படும் அரசுத்துறைகள் குறித்து விசாரணை நடத்தினால் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சட்டவிரோத கிரானைட் மற்றும் கருங்கல் குவாரிகளின்  உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகமும், புவியியல் மற்றும் சுரங்கத்துறையும் சலுகை காட்டுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டிய தமிழக அரசுத் துறைகள் அதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது.

Latest Videos

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் மற்றும் கருங்கற்கள் விதிகளை மதிக்காமல் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுவது தொடர்பான வழக்குகளை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல  அமர்வு, கனிமக் கொள்ளை தொடர்பாக அடுக்கடுக்கான வினாக்களை எழுப்பியுள்ளது. சட்டவிரோதமாக கிரானைட் உள்ளிட்ட கனிமங்களை வெட்டி எடுத்த நிறுவனங்களுக்கு ரூ.321.81 கோடி தண்டம் விதிக்கப் பட்டுள்ளது. ஆனால், அதில் 0.062%, அதாவது ரூ.20 லட்சம் மட்டுமே வசூலித்த அதிகாரிகள், மீதமுள்ள தண்டத்தை வசூலிக்காதது மட்டுமின்றி, சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் உள்ளிட்ட கனிமங்களையும் கிரானைட் கொள்ளையர்கள் எடுத்துச் செல்வதற்கும் அனுமதி அளித்திருக்கின்றனர்.

கிரானைட் உள்ளிட்ட கனிமங்களை கடத்திச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட 111 ஊர்திகள் கடந்த  2021-22ஆம் ஆண்டிலும், 120 ஊர்திகள் 2022-23ஆம் ஆண்டிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் இருந்த கிரானைட் உள்ளிட்ட கற்கள் எதுவும் இப்போது அரசிடமோ, மாவட்ட நிர்வாகத்திடமோ இல்லை. மாறாக, அவை அனைத்தையும் கடத்தல்காரர்களே கொண்டு செல்ல அரசு அனுமதித்துள்ளது. அதுமட்டுமின்றி, கிரானைட் கொள்ளை, கிரானைட் கடத்தல் ஆகியவை தொடர்பாக கோடிக்கணக்கில் தண்டம் விதித்த மாவட்ட நிர்வாகமும், சுரங்கத்துறையும் அவற்றை எளிய தவணைகளில் செலுத்தலாம் என்று சலுகை காட்டியுள்ளன. இதுகுறித்தெல்லாம் அதிர்ச்சி தெரிவித்துள்ள பசுமைத் தீர்ப்பாயம், அதுபற்றி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று அரசுத்துறைகளுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கிரானைட், கருங்கல் உள்ளிட்ட கனிமங்களின் கொள்ளை குறித்த தகவல்களும், அதற்கு அதிகாரிகளே உடந்தையாக இருப்பது குறித்த உண்மைகளும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இது பல ஆண்டுகளாக தடையின்றி நடைபெற்று வருவது தான் என்பது அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

 மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் கொள்ளை குறித்து கடந்த 2011-ஆம் ஆண்டு செய்திகள் வெளியான போதே, மதுரை மாவட்டத்தில் நடைபெறுவதை விட பத்து மடங்குக்கும் கூடுதலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் கொள்ளை நடப்பதை சுட்டிக்காட்டிய பாட்டாளி மக்கள் கட்சி, அதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், அதன்மீது நடவடிக்கை  எடுக்கப்படவில்லை என்பது மட்டுமின்றி, கிரானைட் கொள்ளை தடையின்றி நடக்கவும் அனுமதிக்கப்பட்டது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி அண்மையில் பெறப்பட்ட பதில்கள் இதை உறுதி செய்துள்ளன. 2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டுகளில் மட்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 172 கிரானைட் மற்றும் கல் குவாரிகள் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கிரானைட் கடத்தல் தொடர்பாக 2019 முதல் 2022 வரை 667 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட விவரங்கள் தெரிவிக்கின்றன. அரசால் தெரிவிக்கப்பட்ட  எண்ணிக்கையே இவ்வளவு என்றால், உண்மையில் எந்த அளவுக்கு கிரானைட் கொள்ளையும், கடத்தலும் நடக்கும் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்த அளவுக்கு கிரானைட் கொள்ளை நடந்தாலும் கூட அதைத் தடுப்பதற்கு அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை.

கிரானைட் கொள்ளை தொடர்பாக 667 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில்  எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் யார், யார்? என்று கேட்டால் அது தொடர்பான விவரங்களை வெளியிட அரசு மறுக்கிறது. அதேபோல், சட்டவிரோதமாக செயல்பட்ட கிரானைட் குவாரிகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவை மூடி முத்திரையிடப்பட வேண்டும்; அவ்வாறு செய்வதற்கு பதிலாக வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க கனிமவளத்துறை பரிந்துரைத்துள்ளது; ஆனால், வருவாய்த்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கிரானைட் கொள்ளை மற்றும் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டால், அது பறிமுதல் செய்யப்பட்டு அரசால் ஏலம் விடப்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, கொள்ளையர்களே கடத்தல் கிரானைட்டை எடுத்துச் செல்ல அனுமதிப்பது நியாயமா? இதுவா இயற்கைவளப் பாதுகாப்பு?

இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; கனிமவளக் கொள்ளையை அனுமதிக்கவே கூடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியிருக்கிறது. ஆனால், அதை சற்றும் மதிக்காமல் கிரானைட் கொள்ளை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும், கனிமவளத்துறையும் செயல்படுவது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கிரானைட் கொள்ளை மற்றும் அதற்கு ஆதரவாக செயல்படும் அரசுத்துறைகள் குறித்து விசாரணை நடத்தினால் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் கொள்ளை பற்றி உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்; அதுவரை கிரானைட் குவாரிகளை மூட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

click me!