யாரும் எதிர்பார்க்காத வகையில் கோவை மேயர் வேட்பாளராக கல்பனா அறிவிக்கப்பட்டுள்ளார். இது கோவை மாவட்ட மூத்த உடன்பிறப்புகளுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
கோவை மாநகராட்சிக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி நடந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவை ஓரங்கட்டி கொடி நாட்டி விட்டது. இந்நிலையில் 100 வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கோவை மாமன்ற கூட்ட அரங்கில் பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்றுக் கொண்ட 100 பேரில் 93 பேர் புதியவர்கள். 7 பேர் ஏற்கனவே கவுன்சிலர்களாக பதவி வகித்த அனுபவம் பெற்றவர்கள். இதில் திமுக உறுப்பினர்கள் 73, காங்கிரஸ் 9, சிபிஎம் 4, சிபிஐ 4, மதிமுக 3, மனிதநேய மக்கள் கட்சி 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 2, அதிமுக 3, எஸ்.டி.பி.ஐ 1 ஆகியோர் அடங்குவார்கள்.
undefined
கோவை மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்கள் குறித்து திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக 19 வார்டில் வென்ற கல்பனாவும், துணை மேயராக 92வார்டில் வெற்றி பெற்ற வெற்றிச்செல்வனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வெற்றிச்செல்வன் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் சொந்த வார்டில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக்கின் மனைவி இலஞ்செல்வி,மீனா லோகு,நிவேதா சேனாதிபதி என எதிர்பார்க்கப்பட்ட பலரையும் கழட்டிவிட்டு இருக்கிறது திமுக தலைமை.
பின்னணியில் என்ன நடந்தது என்று விசாரித்தோம். அப்போது பேசிய திமுகவினர் சிலர், 'ஆரம்பத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.. கார்த்திக் மனைவி லக்குமி இளஞ்செல்வி, முன்னாள் கவுன்சிலர் மீனா, மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி மகள் நிவேதா பெயர்கள் பேசப்பட்டன. இறுதியாக, எட்டு பேர் விருப்பக்கடிதம் கொடுத்திருப்பதாக தகவல் வந்தது. அதில், குமுதா, சரண்யா, தெய்வானை, கல்பனா மற்றும் கோமதி பெயர்கள் சொல்லப்பட்டன. அழுத்தம் கொடுத்த நிர்வாகிகள் இவ்விபரங்கள் அடங்கிய பட்டியல், முதல்வர் ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஒவ்வொருவரை பற்றியும் உளவுத்துறை வாயிலாக விசாரிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன் நெருக்கமாக இருந்தவர்கள் யாரென கண்டறியப்பட்டு, பட்டியலில் இருந்து பெயர் விடுவிக்கப்பட்டது.
பின், கட்சியில் மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல், தொடர்ச்சியாக, தங்களது குடும்பத்துக்கே பதவியை எதிர்பார்த்து அழுத்தம் கொடுப்பவர்கள் பெயர்கள் அடுத்தகட்டமாக எடுக்கப்பட்டது.கோடிக்கணக்கில் பணம் வைத்திருந்து, பதவியை விலை பேசியவர்கள், கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருந்து, தனது குடும்பத்தினருக்கு பதவி கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் பெயர்கள் எடுக்கப்பட்டன.
அப்போது, 'மிசா' காலத்தில் சிறைக்குச் சென்ற கட்சித் தொண்டர் பழனிசாமியின் மருமகள் கல்பனா, 19வது வார்டில் போட்டியிட்டு, 3,702 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது தெரியவந்தது. கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த, 40 வயதான கல்பனா, 10ம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.கணவர் ஆனந்தகுமார், பகுதிக்கழக பொறுப்பு குழு உறுப்பினர். இதற்கு முன் டிராவல்ஸ் நடத்தியிருக்கிறார். தற்போது மணியகாரம்பாளையத்தில் ஸ்டேஷனரி மற்றும் இ-சேவை மையம் நடத்துகிறார்.
இவரது தந்தை பழனிசாமி, தி.மு.க., அடிமட்ட விசுவாசி.இதுவரை எந்த பதவியும் வகிக்காதவர்.கல்பனா குடும்பத்தினரின் குடும்ப பின்னணி, கட்சிக்காக அவர்களது குடும்பம் ஆற்றிய பணிகளை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், அவரையே, மேயர் வேட்பாளராக அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ.,வாக இருந்து வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் குடும்பத்துக்கே மீண்டும் பதவி வழங்குவது, கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பதால் பதவி கொடுப்பது, கட்சி நிர்வாகிகளின் குடும்பத்துக்கே பதவி என்பதை தவிர்த்து, சாமானிய தொண்டனுக்கும் கட்சியில் பதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையை விதைக்கும் வகையில், மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
யாரும் எதிர்பாராத விதமாக, கோவை மேயர் வேட்பாளராக கல்பனாவும், துணை மேயர் வேட்பாளராக வெற்றிச் செல்வனும் தி.மு.க., தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு, கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மட்டுமின்றி, கோவை மாநகராட்சி மக்கள் அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவருமே, கோவை மாநகராட்சியின் புதிய கவுன்சிலர்கள்.கல்பனா, கோவையின் பெரும்பான்மை சமுதாயமான கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
பத்தாம் வகுப்பு படித்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வெற்றிச் செல்வன், நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஒன்பதாம் வகுப்பு படித்துள்ளார். அ.தி.மு.க, கொறடாவும், 'மாஜி' அமைச்சருமான வேலுமணி குடியிருக்கும் வார்டில் வெற்றி பெற்றவர் என்பது இவரை தேர்வு செய்ததற்கான முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. கோவையின் இரு பெரும் சமுதாயத்தினருக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஜாதி பார்த்து, தேர்வு செய்துள்ளதாக பேச்சு எழுந்துள்ளது' என்று கூறினர்.