திமுக கேம்பில் தீவிரமடையும் தொகுதி பங்கீடு... கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?

By Kanimozhi PannerselvamFirst Published Mar 8, 2021, 7:26 PM IST
Highlights

சற்று நேரத்திற்கு முன்பு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் திமுக அலுவலகத்தில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகள் இரண்டும் கிட்டத்தட்ட கூட்டணியை உறுதி செய்விட்டன. தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு ஆகிய பணிகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2, விடுதலை சிறுத்தைகள் - 6, இந்திய கம்யூனிஸ்ட் - 6, மதிமுக - 6, மார்க்சிஸ்ட் - 6, காங்கிரஸ் - 25 ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று ஆதித்தமிழர் பேரவை, பார்வர்டு பிளாக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியோரிடம் திமுக தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதியும், ஆதித்தமிழர் பேரவைக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதுமட்டுமின்றி அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அவருக்கு விரைவில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இந்த முறை திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சற்று நேரத்திற்கு முன்பு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் திமுக அலுவலகத்தில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க திமுக தீர்மானித்துள்ளதாக கூறியதாக தெரிகிறது. 

செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன், தொகுதி பங்கீடு குறித்து இருதரப்பிலும் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்று இரவு ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற உள்ளது. அங்கு கலந்தாலோசித்த பிறகே அடுத்தக்கட்ட முடிவு எட்டப்படும் என தெரிவித்தார்.
 

tags
click me!