கொடநாடு கொலை வழக்கு... நீங்க குற்றம் செய்யலைன்னா ஏன் பயப்படணும்.? அதிமுகவுக்கு திருமாவளவன் அட்வைஸ்!

By Asianet TamilFirst Published Aug 18, 2021, 9:09 PM IST
Highlights

கொடநாடு கொலை வழக்கில் அதிமுகவினர் மீது குற்றம் இல்லையென்றால் அவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
 

திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகராலாம் என்ற பெரியாரின் கனவை தமிழக அரசு நனவாக்கியிருக்கிறது. மனிதன் நிலவில்கூட கால் வைத்துவிடலாம். ஆனால், கோயில் கருவறைக்குள் கால் வைக்க முடியாது. இப்படியொரு நிலைமை ஆயிரம் தலைமுறைகளாக நீடித்துவந்தது. அதனால்தான் எல்லோரும் கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்ற உரிமையைப் பெரியார் கேட்டார். அதன் அடிப்படையில் கருணாநிதி அதை சட்டமாக்கினார். ஸ்டாலின் நடைமுறைபடுத்தியுள்ளார். இதை நாங்கள் பாராட்டி வரவேற்கிறோம்.
சுப்பிரமணிய சாமி போன்றவர்கள் சமூகநீதியை விரும்பாதவர்கள். அதனால்தான் இது அவர்களுக்கு எரிச்சலை தருகிறது. கோயிலுக்குள் இந்துக்கள் மட்டுமே செல்வார்களே தவிர இந்துக்கள் அல்லாதவர்கள் போகமாட்டார்கள். இதுவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதன் பொருள். இந்துக்கள் முன்னேறுவதில் இவர்களுக்கு என்ன சிக்கல்? இந்துக்கள் அல்லாதோர் அர்ச்சகரானால் இவர்கள் கோபப்படுவது ஆத்திரப்படுவதில் நியாயம் உண்டு. மாறாக அனைத்து இந்துக்களும் கருவறைக்குள் நுழைவதால் இவர்கள் எரிச்சல்படுகிறார்கள். அப்படியென்றால் அனைத்து இந்துக்களும் சமமானவர்கள் அல்ல என்ற இவர்களுடைய எண்ணத்தை ஒப்புக் கொள்கிறார்கள் என்றேறு அர்த்தம்.


அகில இந்திய அளவில் இத்திட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டோம் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறது. இது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு உற்ற துணையாக இருப்போம். கொடநாடு கொலை வழக்கில் அதிமுகவினர் மீது குற்றம் இல்லையென்றால் அவர்கள் அச்சப்படத் தேவையில்லை. திமுக அரசு எந்தப் புலனாய்வுக்கு உத்தரவிட்டாலும் அதிமுக துணிச்சலோடு எதிர் கொள்ள வேண்டுமே தவிர வெளிநடப்பு செய்யக்கூடாது. சாதி வாரியான இட ஒதுக்கீடு சாத்தியம்தான். இதற்கு உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள 50 சதவீத உச்சவரம்பை நீக்கி மத்திய அரசு அரசியல் அமைமைப்பில் திருத்தம் கொண்டு வரவேண்டும். ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை போர்க்கால அடிப்படையில் விரைந்து மீட்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்” என்று திருமாவளவன் தெரிவித்தார். 

click me!