யோகிக்கு கை கொடுக்கும் ராமர் கோயில்.. பாஜகவுக்கு OBC,பட்டியல் இன மக்கள் ஏகோபித்த ஆதரவு..

By Ezhilarasan BabuFirst Published Aug 18, 2021, 6:05 PM IST
Highlights

உத்திரபிரதேசம் மாநிலம் 20% பிராமண சமுதாயத்தினர் நிறைந்த  மாநிலமாக உள்ளது. அங்குள்ள பிராமண சமுதாய மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கக் கூடும் என நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், பாஜகவுக்கு 70 சதவீதம் ஆதரவு உள்ளது என்றும்

ராமர் கோயில் விவகாரம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என 33 சதவீதம் பேர் கருத்துக்கணிப்பில் கூறியுள்ள நிலையில்  அது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்பதே அக்கட்சியின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. அந்த வாக்குறுதியை நம்பி பெரும்பாலான இந்துக்கள் கடந்த தேர்தலில் பாஜகவுக்கு  வாக்களித்தனர். பல ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு பின்னர் ராமர் கோயில் கட்டும் பணி  தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் 2022- மார்ச் மாதம் உத்திரப்பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  அதை எதிர்கொள்வதற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன, 

மாநிலத்தின் பிரதான கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் இந்த முறை பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என முனைப்புகாட்டி வருகின்றன. உத்தரபிரதேச மாநிலத்தில் செல்வாக்கு நிறைந்த கட்சிகளான, பகுஜன் சமாஜ், சமாஜ் வாடி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் எதிர்வரும் தேர்தல் கௌரவப் பிரச்சினை என்பதால், வரும் தேர்தல் பாஜகவுக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கொரோனா பெருந்தொற்று விவகாரம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மின்கட்டணம் உயர்வு என பல்வேறு பிரச்சினைகள் யோகி ஆதித்யநாத் அரசுக்கு சவாலாக இருக்க கூடும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் பாஜகவின் மிக முக்கிய தேர்தல் வாக்குறுதியான ராமர் கோயில் கட்டும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. அது அம்மாநில பாஜகவுக்கு மிகப்பெரும் ஆதரவைப் பெற்றுத் தரும் என்ற கருத்து நிலவுகிறது. வரும் 2022ஆம் ஆண்டு பாஜகவில் வேட்பாளராக வேண்டும் யோகி ஆதித்யநாத் மீண்டும் களமிறங்குகிறார், வரும் தேர்தலில் அவருக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? என்பது தொடர்பான கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில், மிக முக்கியமான கேள்வியாக ராமர் கோயில் விவகாரம் தேர்தலில் எதிரொலிக்குமா மக்கள் முன் வைக்கப்பட்டது, அதில் 33 சதவீதம் பேர் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் எனறும், 22% பேர் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், 32 சதவீதம் பேர் அதனால் எந்த தாக்கமும் இருக்காது என்றும் பதிலளித்துள்ளனர். அதேபோல் 13% பேர் அதற்கு வாய்ப்பில்லை என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர். 

அதேபோல், உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரை சாதி அடிப்படையில், மக்கள் வாக்களிக்க கூடிய மாநிலம் என்பதால், அங்கு சாதிய சூழலும் முக்கியத்துவம் பெறுகிறது, அம்மாநிலத்தில் தலித்துகள் ஏறத்தாழ 20 சதவீதம், இஸ்லாமியர்கள் ஏறத்தாழ 20 சதவீதமும், இதர பிற்படுத்தப் பிரிவினர் ஏறத்தாழ 40 சதவீதமும், உயர் வகுப்பினர் 20% இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் யாதவர் அல்லாத ஓபிசி பிரிவினர்களின் ஆதரவு யாருக்கு என முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, யாதவர் அல்லாத ஓபிசி பிரிவினர் பெரும்பாலும் பாஜகவுக்கு வாய்ப்பளிக்க கூடும் என 70% பேரும், சமாஜ்வாடி கட்சிக்கு 10 % பேரும், இந்திய தேசிய காங்கிரஸ் 5 சதவீதமும் பிற கட்சிகளுக்கு 10 சதவீதமும் என ஆதரவு தெரிவித்துள்ளனர். 

உத்திரபிரதேசம் மாநிலம் 20% பிராமண சமுதாயத்தினர் நிறைந்த  மாநிலமாக உள்ளது. அங்குள்ள பிராமண சமுதாய மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கக் கூடும் என நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், பாஜகவுக்கு 70 சதவீதம் ஆதரவு உள்ளது என்றும், சமாஜ்வாடி கட்சிக்கு 20% பேரும், பகுஜன்சமாஜ் 10% பெரும், இந்திய தேசிய காங்கிரஸ் 5 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபல் அங்கு பிரதான சமூகங்களாக உள்ள ஜாட்  பட்டியலின மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 30 சதவீதம் பேர் பாஜகவுக்கும், சமாஜ்வாடிக்கு 25 சதவீதப் பேரும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 35 சதவீதம் பேரும், பிறகு கட்சிக்கு 10 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

ஜாட் அல்லாத பட்டியலின மக்களின்  மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பாஜகவுக்கே ஆதரவு என 40 சதவீதம் பேரும், சமாஜ்வாடி கட்சிக்கு 35% பேரும், பகுஜன்சமாஜ் 20% பேரும், மற்றவைக்கு என 10 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இவற்றை வைத்துப் பார்க்கும் போது, பிராமண சமூகமாக இருந்தாலும் சரி, யாதவர்கள் அல்லாத ஓபிசி பிரிவினராக இருந்தாலும் சரி, ஜாட் மற்றும் பட்டியலின சமூகத்தினர் மத்தியிலும் பாஜகவுக்கு ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. 
 

click me!