அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி... புகழாரம் சூட்டிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா...!

By Asianet TamilFirst Published Jun 3, 2021, 10:03 PM IST
Highlights

சமுதாயத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா புகழாரம் சூட்டியுள்ளார். 
 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-ஆம் ஆண்டு பிறந்த நாளை திமுக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்திரன்,  ‘முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்’ என்ற பெயரில் இணையவழி கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த கருத்தரங்கிற்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா காணொலி வடிவில் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அந்த வாழ்த்து செய்தியில் எடியூரப்பா பேசுகையில், “கருணாநிதிக்கும் எனக்கும் நல்ல உறவு இருந்தது. பெங்களூருவில் மூடி வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை கடந்த 2009-ஆம் ஆண்டில் என்னுடைய ஆட்சியில் திறந்து வைத்தேன். 
அந்த விழாவில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியும் கலந்து கொண்டார். இந்த விழாவில் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்றோம். திருவள்ளுவர் சிலை திறப்பு விழா இரு மாநில மக்களிடையே உறவு பலம்பெற உதவியது. சமுதாயத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி. அவருடைய இந்த பிறந்த நாள் விழாவில் அவரை நினைவுகூர்கிறேன்.” என்று எடியூரப்பா பேசியிருந்தார்.

 
கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ‘ நவீன தமிழ் நாட்டின் சிற்பி’ என்று திமுகவினர் சமூக ஊடகங்களில் கொண்டாடிவருகிறார்கள். அவர்களுக்குப் போட்டியாக ‘ஊழலின் தந்தை’ என்று பாஜகவினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் கர்நாடகாவை ஆளும் பாஜக முதல்வர் எடியூரப்பா, கருணாநிதியைப் புகழ்ந்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!