பிளஸ் டூ தேர்வு உண்டா, இல்லையா..? அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்ல வருவது என்ன..?

By Asianet TamilFirst Published Jun 3, 2021, 9:31 PM IST
Highlights

12-ஆம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் எல்லோருடைய கருத்துகளும் பரிசீலிக்கப்பட்ட பிறகே இறுதி முடிவை முதல்வர் எடுப்பார் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 

அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “12-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யத் தெரிந்த பிரதமர் மோடி, ஏன் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா காலத்தைப் பயன்படுத்தி, கல்லூரிகளில் சேரும் எல்லோருக்கும் தேசிய நுழைவுத் தேர்வைக் கொண்டுச் செல்லும் முயற்சியாக இது உள்ளதாக சந்தேகத்தை அவர் எழுப்பியிருக்கிறார். 12-ஆம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் எல்லோருடைய கருத்துகளும் பரிசீலிக்கப்பட்ட பிறகே இறுதி முடிவை முதல்வர் எடுப்பார்.

பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அவர்களுக்கு எந்த அடிப்படையில் மார்க் அளிப்பது என்பதைக் குழு அமைத்து கருத்துக் கேட்டு வருகிறோம். பிளஸ் 2 மாணவர்களுக்குச் சரியாக மதிப்பீடு செய்து மதிப்பெண் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். ஆனால், எந்த அடிப்படையில் மதிப்பீடு செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. கல்வி அமைச்சர்கள் பங்கேற்றோர் கூட்டத்தில் பெரும்பாலானோர் 12-ஆம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என்றுதான் எல்லோரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.


மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களுடைய உடல் நலனும் முக்கியமே. எனவே, அதைக் கருத்தில் கொண்டுதான் முடிவு எடுப்போம். மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனுப்பிய கடிதத்தில்கூட 12-ஆம் வகுப்பு தேர்வுகளை எப்படி நடத்தலாம் என்றுதான் கருத்து கேட்கப்பட்டிருந்தது. தேர்வை ரத்து செய்வது குறித்து எந்தக் கருத்தும் கேட்கப்படவில்லை. ஆனால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2013, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பலரும் பணிக்காகக் காத்திருக்கின்றனர். பள்ளி திறக்கப்படும் நேரத்தில் இதுகுறித்து உரிய பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும்". என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 

click me!