
மொழிவாரி மாநிலங்கள் பிரிந்து நாளையோடு அறுபதாம் ஆண்டு நிறைவு பெறுவதால் தமிழக மக்களை எல்லாம் வாழ்த்துவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
நாளை நவம்பர் 1. 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தான், மொழிவழி மாநிலங்கள் பிரிந்து, தமிழ்நாடு தனி மாநிலமாகவும், ஆந்திரா தனி மாநிலமாகவும், கேரளா தனி மாநிலமாகவும், கர்நாடகா தனி மாநிலமாகவும் பிரிந்து, அறுபது ஆண்டுகள் ஆகின்றன என தெரிவித்துள்ளார்.
மொழி வழி மாநிலம் அமைய பெரும் பாடு பட்டவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், தோழர் ஜீவா, சிலம்புச் செல்வர்,சங்கரலிங்கனார், நேசமணி போன்ற தலைவர்களாவர். அதற்காக பல போராட்டங்கள் எல்லாம் நடைபெற்றன.
அந்தக் காலத்தில் “மதராஸ் ஸ்டேட்” (சென்னை ராஜதானி) என்று தான் அழைக்கப்பட்டு வந்தது. மொழிவழி மாநிலங்கள் பிரிந்த போதும், “தமிழ்நாடு”என்று பெயர் சூட்ட மறுத்தது அப்போதிருந்த காங்கிரஸ் அரசு.
இந்த மாநிலத்தின் பெயர் “மதராஸ்” என்று அழைக்கப்பட்டதை, “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டும் தீர்மானத்தை 1967ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் தேதியன்று தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் முதலமைச்சராக இருந்து சட்டப் பேரவையில் கொண்டு வந்தார்.
அவ்வாறு பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகச் சட்டப் பேரவையில் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய தீர்மானத்திற்கு அடுத்த ஆண்டு ஐம்பதாம் ஆண்டு பிறக்க இருக்கின்ற நேரத்தில் மொழிவழி மாநிலங்கள் பிரிந்து நாளையோடு அறுபதாம் ஆண்டு நிறைவு பெறுகின்ற நேரத்தில் தமிழ் மக்களை எல்லாம் வாழ்த்துவதாகவும், தமிழ்நாடு என்று பெயர் அமைய பாடுபட்ட தலைவர்களை எல்லாம் போற்றுவதாகவும் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.