
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நிழலாக, உதவியாளராக, குடும்ப உறுப்பினர்களை தாண்டி பாசத்திற்குரியவராக, இன்னும் சகலமுமாக வலம் வந்தவர் நித்யா என்றா நித்யானந்தம்.
கருணாநிதியை குடும்ப உறுப்பினர்கள் பார்த்திருந்தால் கூட நித்யா அளவுக்கு அவர்கள் பணிவிடை செய்திருக்கமாட்டார்கள் என்பது திமுக முன்னணியினர் கருத்து. அந்தளவுக்கு தனது குடும்பத்தை மறந்து, நட்பு வட்டங்களை துறந்து கருணாநிதியின் காலடியில் கிடந்தார் நித்யா. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நித்யாவுக்கான கோட்டாவில் பல்லாவரத்தை ஒதுக்கி இ.கருணாநியை எம்.எல்.ஏ ஆக்கினார் மு.கருணாநிதி.
ஊடகங்களில் அதிகம் நெருக்கம் காட்டாமல், குடும்ப விவகாரங்களை கசிய விடாமல் பார்த்துக்கொண்டதால் நித்யாவுக்கு கருணாநிதி குடும்பத்தில் எப்போதும் தனி இடம் உண்டு. கருணாநிதியை முழு நேரமும் உடன் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசுப் பணியை(உதவி மக்கள் தொடர்பு அலுவலர்) ராஜினாமா செய்தார் நித்யா. கட்சியினர் மத்தியில் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் நித்யா லைம்லைட்டில் இல்லை. வயது 40-ஐ நெருங்கியதால் நித்யாவின் குடும்பத்தினர் அவரை திருமணம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
இத்தனை ஆண்டுகளாக குடும்பத்தினருக்கு பிடி கொடுக்காமல் இருந்த நித்யா, இப்போது திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொண்டதோடு அதற்கு ஒரு நிபந்தனையையும் விதித்துள்ளார். 20 தொகுதி இடைத்தேர்தல் மூலம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனது திருமணத்தை வைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
இதுவரை திருமணமே வேண்டாம் என்று சொல்லியவை, இப்போது திருமணம் செய்ய முன் வந்ததால் அவரது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெண் பார்க்கும் படலம் எல்லாம் கூட முடிந்துவிட்டதாகவே கூறுகிறார்கள் நித்யாவுக்கு நெருக்கமானவர்கள். மேலும், அவரை அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் அவரது நட்பு வட்டத்தினர் அழுத்தம் தருவதால் அதற்கான தீவிர ஆலோசனையிலும் நித்யா ஈடுபட்டுள்ளார்.