அதிமுகவுடன் கூட்டணி... பாமக போட்ட பக்கா கால்குலேஷன்...!

By Asianet TamilFirst Published Feb 8, 2019, 4:43 PM IST
Highlights

கூட்டணி குறித்த கச்சிதமான கால்குலேஷன்களில் ஈடுபட்ட பிறகே அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற முடிவுக்கு பாமக வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூட்டணி குறித்த கச்சிதமான கால்குலேஷன்களில் ஈடுபட்ட பிறகே அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற முடிவுக்கு பாமக வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் அமைப்பு ரீதியாக பாமக வலுவான கட்சி. வட மாவட்டத்துக்குட்பட்ட ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் குறிப்பிட்ட செல்வாக்கு இந்தக் கட்சிக்கு உண்டு. இந்தச் செல்வாக்கின் அடிப்படையில்தான் திமுகவும் அதிமுகவும் பாமகவை கடந்த காலங்களில் கூட்டணியில் சேர்க்க ஆர்வம் காட்டின. ஆனால், இந்த முறை இதே ஃபார்மூலாவை வைத்துதான் பாமக அதிமுகவுடன் கூட்டணி சேரும் முடிவுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. 

கூட்டணி யுகத்துக்குள் திரும்பிய பிறகு 1999 நாடாளுமன்றத் தேர்தல், 2011 சட்டப்பேரவையின் தேர்தலில் மட்டுமே பாமக ஆளுங்கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்திருக்கிறது. மற்ற எல்லாத் தேர்தல்களிலும் எதிர்க்கட்சி கூட்டணியில் இடம் பிடித்தே பாமக வந்துள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசும் என்ற அடிப்படை தத்துவத்தில் எதிர்க்கட்சியுடன் கூட்டணிக்கு பாமக விரும்புவது வழக்கம். இந்த முறையும் தொடக்கத்திலிருந்து திமுகவுடன் கூட்டணி அமைக்கவே பாமக விரும்பியது. ஆனால், திமுகவிலிருந்து சரியான சிக்னல்கள் கிடைக்காததால், வேறு வழியின்றி தற்போது அதிமுக பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறது. 

பிளவுப்பட்ட அதிமுக, ஆளுங்கட்சிக்கான எதிர்ப்பு, மக்களை வசீகரிக்கக்கூடிய தலைவர் இல்லாதது போன்ற அம்சங்கள் அதிமுகவில் இருப்பதால், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க பலருக்கும் தயக்கம் இருக்கிறது. ஆனால், வட மாவட்டங்களில் தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் அதிமுக கூட்டணி உதவும் என்ற அடிப்படையில்தான் தற்போது அதிமுக கூட்டணிக்கு செல்லலாம் என்ற முடிவுக்கு பாமக வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில் இந்த முடிவை பாமக எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகளின் வெற்றி மார்ஜின் குறைவாக இருக்கும் என்று பாமக கணக்கு போட்டிருக்கிறது. அதிமுக ஓட்டு, தினகரனுக்கான ஓட்டு, திமுகவுக்கான ஓட்டு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு தங்களுக்கு சாதகமான  கணக்கைப் பாமக போட்டிருக்கிறது. இதன்படி வட மாவட்டங்களில் தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் எப்படியும் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பாமகவுக்குக் கிடைக்கும் என அக்கட்சி கருதுகிறது. அந்தத் தொகுதிகளில் அதிமுகவுக்கென உள்ள ஓட்டுகளில் குறைந்தபட்சம் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 10 ஆயிரம் வாக்குகள் கிடைத்தாலும் கூட வெற்றிக்கான மார்ஜினை நெருங்கிவந்துவிடலாம் என்பதுதான் பாமகவின் கணக்கு.  

உதாரணமாக, தருமபுரியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி 4.68 லட்சம் வாக்குகளைப் பெற்றார். அதிமுக 3.91 லட்சம் வாக்குகளைப் பெற்றது. இதில் கூட்டணி கட்சிகளின் வாக்குகளைப் பிரித்தாலும் கணிசமான வாக்குகள் மீண்டும் கிடைத்துவிடும் என்று பாமக நம்புகிறது. இதேபோல அதிமுக பிளவால் ஓட்டு பிரிந்தாலும், குறைந்தபட்சம் தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டப்பேரவையிலும் 10 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தாலும் வெற்றிக்கான மார்ஜினை நெருங்கிவந்துவிடலாம் என்று பாமக போட்டிருக்கும் தேர்தல் கணக்குகளைப் பற்றி தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். 

இதேபோல செல்வாக்குள்ள தொகுதிகளில் எல்லாம் கணக்குகளைப் போட்டு பார்த்த பிறகே, அதிமுகவுடன் கூட்டணிக்கு செல்லலாம் என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அதிமுக-பாமக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் இதுவரை அறிவிக்கவில்லை என்றாலும், அக்கட்சியில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளில் இந்த கால்குலேஷன்களில்தான் தற்போது மூழ்கியிருக்கிறார்கள் என்று அக்கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

click me!