
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக முன்னணி நிர்வாகிகளின் வாரிசுகள் பலரும் தீவிர களப்பணியை தொடங்கியுள்ளனர். திமுக வாரிசு அரசியல் கட்சி என்ற விமர்சனம் ஒரு புறம் ஓங்கி ஒலித்துக்கொண்டு இருந்தாலும், அதைப்பற்றி துளியும் சட்டை செய்யாமல் பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற அங்கப்பிரதட்சணம் செய்யாத குறையாக ஸ்டாலினை சுற்றி வர தொடங்கியுள்ளனர் முன்னாள் அமைச்சர்கள் பலரும்.
கொங்கு மண்டல திமுகவில் சீனியரான பொங்கலூர் பழனிசாமி தனது மகன் பைந்தமிழ் பாரியை பொள்ளாச்சி அல்லது கோவையில் களமிறக்குவதற்கான வேலைகளை செய்து வருகிறார். அதற்கேற்ப கட்சியில் இளைஞரணி துணைச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் பைந்தமிழ் பாரி முன்பைக் காட்டிலும் கட்சிப்பணிகளில் தீவிரம் கவனம் செலுத்தி, நிர்வாகிகளையும் தொண்டர்களையும் அரவணைக்கிறார்.
வடக்கு மாவட்ட திமுகவில் கால் நூற்றாண்டுக்கு மேல் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னாள் அமைச்சர் பொன்முடி, தனது மகன் கவுதம சிகாமணியை எம்.பி.தேர்தலில் களமிறக்க திட்டமிட்டுள்ளார். எலும்பு முறிவு மருத்துவரான கவுதம சிகாமணி தளபதி நற்பணி மன்றம் என்ற பெயரில் விழுப்புரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மேலும், அவரது கல்லூரி கால தோழரான சி.விஜயபாஸ்கர் அமைச்சராகிவிட்ட நிலையில் எம்.பி.ஆவது ஆக வேண்டும் என கவுதம சிகாமணி கங்கணம் கட்டியுள்ளார்.
கடந்த முறை தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கலைஞரின் முரட்டு பக்தர் என்று அழைக்கப்பட்ட பெரியசாமி மகன் ஜெகன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த முறை தூத்துக்குடி தொகுதியில் இருந்து தங்கை கனிமொழியை எம்.பி.யாக்கி நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க திமுக தலைவர் ஸடாலின் விருப்பப்படுகிறார்.
கடந்த முறையே வேலூர் தொகுதியை மகன் கதிருக்கு எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த துரைமுருகன் இந்த முறை விடுவதாக இல்லை.பொதுவாக திமுக கூட்டணியில் இடம்பெறும் இஸ்லாமிய கட்சிகளுக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்படுவது வழக்கம். இதனால் துரைமுருகனின் விருப்பத்தை நிறைவேற்றுவது ஸ்டாலின் கையில் தான் இருக்கிறது என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.
கரூர் மக்களவை தொகுதி வேட்பாளராக கருதப்படும் சின்னச்சாமி, தனக்கு பதில் தனது மகன் மருத்துவர் முரளியை களமிறக்கலாமா என்ற யோசனையில் உள்ளார். இதேபோல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மகன் கதிரவன், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் மருத்துவர் பிரபு, தயாநிதி மாறன், உள்ளிட்ட பலரும் எம்.பி.கனவில் உள்ளதால் வேட்பாளர் தேர்வு முடிந்து அறிவிப்பு வெளியிடும் வரை ஸ்டாலினுக்கு தலைவலி நீடிக்கும் என்றே தெரிகிறது.