
ஜுன் 3 ஆம் தேதி தனது பிறந்த நாள் அன்று திமுக தொண்டர்களை கருணாநிதி சந்திக்க உள்ளார். நீண்ட நாட்களுக்குப் பின் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளதால் அவர்கள் மத்தியில் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது.
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடந்த 10 மாதங்களாக உடல் நலம் சரியில்லாததால், வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து டிஸ்சார்ஜ் ஆன அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வருகிறார். அவருக்கு பேச்சு பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வரும் ஜுன் 3 ஆம் தேதி கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள் அன்று அவர் சென்னை அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக ஆர்,எஸ்.பாரதி எம்.பி.தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய அரசியலில் மிகப் பெரிய சக்தியாக விளங்கி வரும் திமுக தலைவர் கருணாநிதியின் இந்த பிறந்த நாளை கருணாநிதியின் வைர விழாவாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது.
இதில் சோனியா, நிதீஷ் குமார், லல்லு பிரசாத் யாதவ், நவீன் பட்நாயக், பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்ததது. இதற்கான ஏற்பாடுகளை மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் செய்து வருகின்றனர்.