
மணல் மன்னன் சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை சார்பில் தமிழக அரசுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மணல் வியாபாரம் மற்றும் பொது பணித்துறை ஒப்பந்த பணிகளில் கொடிகட்டி பறந்தவர் சேகர் ரெட்டி. கடந்த டிசம்பர் மாதம் இவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, 130 கோடியே 52 லட்ச ரூபாய் பணமும், ரூ.500 கோடி முதலீட்டுக்கான ஆவணங்களும், 150 கிலோவுக்கு மேற்பட்ட தங்கமும் கைப்பற்றப்பட்டது.
மேலும் முக்கிய டைரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சேகர் ரெட்டி, சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம் குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சேகர் ரெட்டியின் டைரியில் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் அதிகாரிகள் பெயர்கள் இடம்பெற்று உள்ளன. ரூ.300 கோடி வரை அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக டைரியில் குறிப்பு எழுதப்பட்டுள்ளது.
அந்த டைரியில் அன்றைய அமைச்சரும் இன்றைய முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்தே, மத்திய அரசை தேவை இல்லாமல் விமர்சிக்க வேண்டாம் என்று, அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கூறி இருந்தார்.
எனினும், சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட டைரியின் அடிப்படையில், முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட பல அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்த வருமானவரி துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனால், அமைச்சர்கள் பலரும் தூக்கத்தை தொலைத்து விட்டு புலம்பி வருவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரிச்சோதனை, அமைச்சர் காமராஜ் மீது பணமோசடி புகார் என பல பிரச்னைகளை அதிமுக அமைச்சர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், வருமானவரி துறையின் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு, ஆட்சியே கவிழும் நிலை உருவாகும் என்று அஞ்சப்படுகிறது.