
அதிமுக துணை போது செயலாளர் தினகரன் சிறை சென்றது முதல், சசிகலாவை சந்தித்து, தமக்கோ, தமது மகனுக்கோ கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பை வாங்கிவிட வேண்டும் என்று துடியாய் துடித்து வருகிறார் திவாகரன்.
தினகரன், சிறைக்கு சென்ற பின்னர் தம்முடைய ஆதரவு எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து, அவர்களுடன் தொடர்ந்து ஆலோசனையும் நடத்தி கொண்டிருக்கிறார் அவர்.
குடும்பத்தை சேர்ந்த யாருமே, கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்பில் இல்லாததால், தங்கள் கட்டுப்பாட்டை இழக்க நேரும் என்ற அச்சமும் திவாகரனை ஆட்டிப்படைத்து வருகிறது.
மேலும், இளவரசி மகன் விவேக்கை கட்சியின் துணை போது செயலாளராக சசிகலா நியமித்து விட்டால், மீண்டும் தினகரன் கை ஓங்கிவிடும் என்ற அச்சமும் அவருக்குள் இருக்கிறது.
இதற்காக, தமது மகன் ஜெய் ஆனந்தை தொடர்ந்து பெங்களுருவில் தங்க வைத்து சசிகலாவிடம் பேசி, அவர் மனதை மாற்றும் அசைன்மென்ட் கொடுத்திருந்தார்.
ஆனால், எதுவாக இருந்தாலும், நீ விவேக்கிடம் பேசிக்கொள் என்று, திவாகரன் மகன் ஜெய் ஆனந்திடம் முகத்தில் அடித்தார் போல் சொல்லிவிடுகிறாராம் சசிகலா.
அதனால், தாமே நேரடியாக சந்தித்து சசிகலாவிடம் பொறுப்பு ஒன்றை, வாங்கி வந்து விடலாம் என்ற திட்டத்துடன், திவாகரன் பெங்களூரு சென்றுள்ளார்.
ஆனால், நான் இப்போது இருக்கும் மனநிலையில், யாரையும் சந்திக்க விருப்பம் இல்லை. எதுவாக இருந்தாலும், விவேக்கிடம் சொல்லவும் என்று திவாகரனை சந்திக்க மறுத்து விட்டாராம் சசிகலா.
இதனால், தந்தையும், மகனும் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள். மேலும், தினகரன் இல்லாத இந்த நிலையில், விவேக்குக்கு எந்தப்பொறுப்பும் சசிகலா வழங்கி விட கூடாது என்ற நோக்கத்தில், பன்னீர் அணியினருக்கு, விவேக் பற்றிய ரகசியங்களை அவர் அனுப்பி வருவதாகவும் தகவல்.
மறுபக்கம், தமது நெருங்கிய உறவுகளிடம், தினகரன் போடாத ஆட்டமெல்லாம் போட்டு, கட்சியை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தியது பத்தாதா?
தற்போது விவேக்குக்கு மகுடம் சூட்ட சசிகலா முயற்சிக்கிறார். இனி அவன் ஆட்டத்தையும் பார்க்க வேண்டுமா? என்று திவாகரன் விரக்தியுடன் புலம்பி வருகிறாராம்.