
திமுகவுடன் ஒ.பி.எஸ் இணக்கமாக கூடாது என்பதற்காக அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல் எழுப்பப்பட்டதாக அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னாள் கல்வி அமைச்சருமான வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக சசிகலாவும், முதலமைச்சராக பன்னீர் செல்வமும் பொறுப்பேற்றனர்.
ஆனால் சசிகலாவின் பதவி ஆசையால் ஒ.பி.எஸ்ஸின் முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதற்கு ஒ.பி.எஸ் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுடன் கைகோர்க்க பார்த்தார். அதனால் தான் அதிமுகவை பிரிக்க பார்கிறார் என காரணம் சொல்லப்பட்டது.
ஆனால் மக்களும் அதிமுக தொண்டர்களும் சசிகலா வட்டாரங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை கிடைக்கவே எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யபட்டார்.
இதையடுத்து இரு அணிகளின் மோதலால் அதிமுகவின் பிரதான சின்னமான இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
எனவே தற்போது இரு அணிகளும் சேர்வதற்கான பேச்சுவார்த்தை நிலவி வந்த நிலையில், ஒ.பி.எஸ் அணி முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இந்நிலையில், எடப்பாடி அணியின் ஆதரவாளரான வைகை செல்வன் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இரண்டு அணிகள் இணைவதில் எந்த பிரச்சனையும் இல்லை.
எங்களுடைய வாசல் திறந்து பல மாதங்கள் ஆகிறது.
ஒ.பி.எஸ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
டிடிவி தினகரன் தாமாகவே ஒதுங்கி கொண்டு விட்டார். தலைமை செயலகத்தில் இருந்த சசிகலாவுடைய பேனர்களும் அகற்றப்பட்டு விட்டன.
ஏதோ ஒரு காரணத்திற்காக இழுப்பறி நிலை தொடர்கிறது. கட்சி காப்பாற்றப்பட வேண்டும், ஆட்சி நிலைபெற வேண்டும். ஜெயலலிதாவின் கனவு நிறைவேற அனைவரும் ஒரு அணியை செயல்பட வேண்டும்.
பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்குவதற்கான கட்டாயம் தற்போது இல்லை.
யாரும் கூவத்தூரில் அடைத்து வைக்கப்படவில்லை. அதனால் தான் செம்மலை, சரவணன் போன்றோர் வெளிவர முடிந்தது.
திமுகவுடன் ஒ.பி.எஸ் இணக்கமாக கூடாது என்பதற்காக அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல் அப்போது எழுப்பப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.