தமிழகப் பள்ளிப் பாடங்களில் கருணாநிதி பற்றிய பாடம்... பதவியேற்றதும் திண்டுக்கல் லியோனி அதிரடி.!

By Asianet TamilFirst Published Jul 12, 2021, 8:57 PM IST
Highlights

முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடத்தை 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக பதவியேற்ற திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.
 

தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் திண்டுக்கல் லியோனியை தமிழக அரசு நியமித்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது பெண்கள் குறித்து லியோனி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் லியோனி தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புக்கு மத்தியில் தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக  திண்டுக்கல் லியோனி இன்று பொறுப்பேற்றார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பதவியேற்ற பிறகு, செய்தியாளர்களை லியோனி சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “2011-ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று பாடப் புத்தகத்தை கீழே வைத்தேன். 10 ஆண்டுகள் கழித்து 2021ல் மீண்டும் கையில் எடுத்துள்ளேன். பாடநூல்களை மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில் மாற்றுவதே என்னுடைய நோக்கம்.
 நான் மாணவராக இருந்த காலக்கட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் பேச்சு பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதுபோல ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் கருணாநிதியின் கல்விப் பணி, இலக்கிய பணி, பிற்படுத்தப்பட்டோருக்காக ஆற்றிய பணிகள் ஆகியவற்றைச் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.”
 

click me!