தமிழ்நாடு என்று சிந்திக்கும் மக்கள் மத்தியில் கொங்குநாடு என பிரிவினையை விதைப்பதா..? கே.பி.முனுசாமி ஆவேசம்.!

By Asianet TamilFirst Published Jul 12, 2021, 8:49 PM IST
Highlights

நம் நாடு, தமிழ்நாடு என்று சிந்திக்கும் மக்களின் மனதில் கொங்கு நாடு என்ற பிரிவினை விதைகளை விதைக்க வேண்டாம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
 

கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணா இயக்கத்தை முதலில் அரசியல் கட்சியாக உருவாக்கியபோது 'திராவிட நாடு, திராவிடருக்கே' எனக் குரல் கொடுத்தார். ஆனால், காலப்போக்கில் இந்த நாடு ஒரு வளம் பொருந்திய நாடாக, பலம் பொருந்திய நாடாக வர வேண்டும், அப்படி வரும்போது தமிழகம் அனைத்து வகைகளிலும் தலைசிறந்த மாநிலமாக உருவாக வேண்டும் என்று நினைத்தவர். 
மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வை கொண்ட ஓர் அரசியல் தலைவர் அண்ணா. அவரே திராவிட நாடு சிந்தனையை உதிர்க்க வைக்கச் சொன்னார் என்றால், இந்த மண்,  நாடு, மக்கள், திராவிட இயக்கத்தின் மீது எவ்வளவு பற்று வைத்திருப்பார் என்பதை உணர வேண்டும். எந்த ஒரு மாநிலக் கட்சியும் ஆட்சிக்கு வரும்போது, மாநில அரசு அதிகாரங்களை வரைமுறைப்படுத்தி, அந்த அதிகாரத்துக்குள் மத்திய அரசு வரக்கூடாது என்று எதிர்பார்ப்பது வழக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி வரை அவர்களுடைய சிந்தனை அப்படித்தான் இருந்தது.


அண்ணா எடுத்த நிலைப்பாட்டின்படிதான் அதிமுக வந்து கொண்டிருக்கிறது. இப்போது திடீரென கொங்கு நாடு என்கிறார்கள். யாரையோ அவர்கள் சிறுமைப்படுத்த வேண்டும் என இப்படி ஒரு விஷமத்தனமான சிந்தனையில் இறங்குவது நாட்டுக்கு நல்லதல்ல. அது யார் கொண்டு வந்திருந்தாலும், யார் முன்னிறுத்தியிருந்தாலும் இதைத் தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அறிவியல் உலகில் உலகமே ஒரு சிறு கைக்குள் வந்துவிட்டது. அப்படியிருக்க பல்வேறு பாதுகாப்பு, வளர்ச்சி இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாடு பலமாக இருக்க வேண்டும், சக்தி படைத்ததாக உருவாக வேண்டும்.
அந்த அடிப்படையில் சிறு சிறு மாநிலங்களாகப் பிரிக்கிறபோது அந்தப் பலம் நிச்சயம் குறையும் என்பதே என் பார்வை. அவர்கள் ஏதோ சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கருத்தை அக்கட்சியின் தலைமையே ஏற்குமார் என்பதுகூடத் தெரியாது. எதுவும் தெரியாத பட்சத்தில், தனி நபரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தென்கோடி கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை உள்ள எல்லா மக்களும் இது நம் நாடு, தமிழ்நாடு என்றுதான் சிந்திக்கிறார்கள். இப்படி சீரிய தூய சிந்தனையோடு வாழும் மக்களின் மனதில் கொங்கு நாடு என்ற பிரிவினை விதைகளை விதைக்க வேண்டாம்” என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார். 

click me!