
இபிஎஸ் ? ஓபிஎஸ் அணியினருக்கே இரட்டை இலைச் சின்னம் என்று அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது ஏற்கனவே சொல்லிவச்சது போல் உள்ளது என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மரணமடைந்து ஓர் ஆண்டுக்குப் பின்னர் அவரது தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனேவே கடந்த மார்ச் மாதம் அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பான குற்றச்சாட்டால் ரத்து செய்யப்பட்டது.
அதே நேரத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டு அது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. தற்போது சின்னம் இபிஎஸ் –ஓபிஎஸ் அணிக்கே என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இத்தனை நாட்களும் ஆர்,கே.நகர் தொகுதிக்கு தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையம் தற்போது இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ் –ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியவுடன் அறிவித்துள்ளது அரசியல் கட்சிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, நேற்றுத்தான் இரட்டை இலைச் சின்னம் பழனிசாமி அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், இன்று காலையே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் டிசம்பர் மாதம் 21ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இவ்வாறு சின்னம் ஒதுக்கப்பட்ட மறுநாளே தேர்தல் தேதியை அறிவித்திருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது என்று கூறினார்.
இது ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்து அறிவிக்கப்பட்டதைப் போல் உள்ளது என்றும் கனிமொழி சந்தேகம் எழுப்பினார்.