
கேரளா, டெல்லி முதல்வர்களைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்க இருக்கிறார் கமல்ஹாசன்.
கமல் எப்போது அரசியலுக்கு வருவார் என்பதுதான் தமிழகத்தின் தற்போதைய மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கினார் கமல்.
அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன். கட்சி ஆரம்பித்து அரசியலில் தனித்து செயல்படுவேன் என கமல் திட்டவட்டமாக கமல் தெரிவித்துள்ளார். ரஜினியுடன் கைகோர்த்து ஒன்றாக செயல்பட தயாராக இருப்பதாக கமல் தெரிவித்தார். இன்னும் 100 நாட்களில் தேர்தல் வந்தால் தேர்தலை தனித்து சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.
கேரளா சென்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த கமல்ஹாசன், அரசியல் கற்றுக்கொள்வதற்காக அவரை சந்தித்ததாக கூறினார். அதன்பிறகு அண்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சென்னை வந்து கமலை சந்தித்தார். கமல் அரசியலுக்கு வரவேண்டும் என கேஜ்ரிவால் அழைப்பு விடுத்தார்.
கேரளா, டெல்லி முதல்வர்களைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்க கமல் நேரம் கேட்டதாகவும் அவருக்கு மம்தா நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மம்தாவிடமும் அரசியல் குறித்து கமல் விவாதிக்க உள்ளார்.
பாஜக, காங்கிரஸ் அல்லாத மற்ற மாநிலங்களைச் சேர்ந்த பிராந்திய கட்சித் தலைவர்களுடனும் முதல்வர்களுடனும் கமல் சந்தித்து வருகிறார். இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு அப்பாற்பட்டு தேசிய அளவிலான மூன்றாவது கூட்டணியை உருவாக்க கமல் முயற்சிக்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.