
அதிமுகவின் 2 அணிகள் இணைந்தாலும் டி.டி.வி.தினகரன்தான் துணைப் பொதுச் செயலாளராக நீடிப்பார் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டில் மெஜாரிட்டி ஆட்சி நடந்து வருவதாக தெரிவித்தார். தற்போது ஜெயலலிதா ஆட்சிதான் நடந்து வருவதாகவும் கூறினார்.
அதிமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டாக உடைந்தது. பின்னர் இரு அணிகளும் இணைந்து இரட்டை இலையை மீட்டன.
அது போலத்தான் தற்போதும் அதிமுக இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. இரு அணிகளும் இணைவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது வரை டி.டி.வி.தினகரன்தான் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். இரு அணிகளும் இணைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டவுடன் அவராகவே ஒதுங்கிக் கொண்டார்.
அவர் ஒதுங்கிக் கொண்டபிறகு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு கூடியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுகவின் இரு அணிகள் இணைந்தாலும் டி.டி.வி.தினகரன்தான் அக்கட்சியின் பொதுச் செயலாளராக நீடிப்பார் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.