இரு பெண்கள் வெற்றிகரமாக தரிசனம் செய்து பார்ப்பனீய முதுகெலும்பை முறித்துள்ளனர்! வெறித்தனமா அறிக்கை விட்ட கி.வீரமணி

By sathish kFirst Published Jan 3, 2019, 7:38 PM IST
Highlights

இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்டு, தடுக்கப்பட்டு வந்த இரு பெண்கள் வெற்றிகரமாக தரிசனம்'' செய்து, கேரள பார்ப்பனீய சனாதனத்தின் முதுகெலும்பை முறித்துள்ளனர்! என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

சபரிமலை அய்யப்பனை இரு பெண்கள் சென்று தரிசித்துவிட்டதால், சந்நிதானம் தீட்டாகிவிட்டது என்று கூறி, இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பார்ப்பன அர்ச்சகர் தீட்டுக் கழிப்பதும், பிராமண போஜனம் செய்வதும் பார்ப்பன ஆதிபத்தியம் இன்னும் தலைவிரித்தாடுகிறது என்பதற்கான ஆதாரம்தானே! சபரிமலைக் கோவிலில் வழிபட பெண்களுக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்ப்பு அளித்த பிறகும், அதற்கு மாறாக நடந்துகொண்ட அர்ச்சகன்மீது சட்டப்படி நடவடிக்கையை கேரள அரசு எடுக்கவேண்டும் என்று   திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய  அறிக்கை  வருமாறு:

இசுலாமியப் பெண்ணுரிமை என்று கூறி, முத்தலாக்' மணவிலக்கு முறைக்கு எதிராகத் தீவிரம் காட்டும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், சபரிமலையின் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட விரும்பும் அனைத்து வயது பெண்களின் நலனில் - உரிமையில் மட்டும் அதற்கு நேர்மாறாக - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேரள அரசு செயல்படுத்துவதற்கு எதிராக நடக்கலாமா? தேவையற்ற கலவரத்தை ஏற்படுத்தி, கேரள கம்யூனிஸ்ட் அரசைக் கவிழ்க்க இந்த ஆயுதத்தை முழுவீச்சில் பயன்படுத்த முனைகிறதே, இது இரட்டை வேடம் அல்லவா?

சபரிமலைக்கு ஒரு நீதி - முத்தலாக்குக்கு வேறொரு நீதியா?

மத விஷயங்களில் (Makers of Religion) தலையிடுவது கூடாது  - தவறு என்று கூறி, சபரிமலை தீர்ப்புக்கு முட்டுக்கட்டை போடும் காவிகள், அதற்கு நேர்முரணாக முத்தலாக் - முசுலிம் பெண்கள் விஷயத்தில் மாத்திரம் மிகுந்த கரிசனம் காட்டுவானேன்?

அனைத்துப் பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தும் அறப்போரில் துளியும் இதே கரிசனத்தைக் காட்டாதது ஏன்? மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

நாடும், உலகமும் இந்த நயவஞ்சக நரித்தனத்தை நன்கு புரிந்துகொண்டு வரவே செய்கிறது!

சனாதனத்தின் முதுகெலும்பு முறிப்பு

பக்தி என்ற போதைச் சரக்கை மதவெறி நஞ்சைக் கலந்து, மனிதநேயத்தை - சமத்துவத்தை - சகோதரத்துவத்தை சாக அடிக்க அல்லவா இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

எல்லாத் தடைகளையும் மீறி நேற்று (2.1.2019) சபரிமலை அய்யப்பனை, 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் - இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்டு, தடுக்கப்பட்டு வந்த இரு பெண்கள் வெற்றிகரமாக தரிசனம்'' செய்து, கேரள பார்ப்பனீய சனாதனத்தின் முதுகெலும்பை முறித்துள்ளனர்!

பக்திப் பிரச்சினையல்ல - உரிமைப் பிரச்சினை!

இதற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, தமது கடமையைச் சரிவர செய்த கேரள அரசின் காவல் துறை அதிகாரிகளுக்கு நமது பாராட்டுதல்களும், வாழ்த்துகளும் உரித்தாகுக!

இது பக்திப் பிரச்சினை அல்ல; இது முழுக்க முழுக்க மனித உரிமையை மதிக்கும் பிரச்சினை - அரசியல் சட்டத்தினை மிதிக்க முற்படும் காவிக் கும்பலுக்கு சரியான பாடம் புகட்டும் நிகழ்வு ஆகும்!

கடவுள் பக்திக்கு ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வினர் முக்கியத்துவம் தருபவர்களாக இருந்தால், கடவுளைக் கும்பிட இரு கைகளை நீட்டி அல்லவா வருகின்ற பக்தைகளை வரவேற்கவேண்டும்? அதற்கு மாறாக, தடுப்பது ஏன்? கோவிலுக்குப் போகாதீர், திரும்புங்கள்'' என்று கூறுகிறார்கள் என்றால், இதன் பொருள் என்ன? இந்து மதமோ, கடவுளோ அவர்களுக்கு முக்கியமல்ல; பக்தி முகமூடியைப் பயன்படுத்தி அரசியலைக் கைப்பற் றவே இந்தப் பகல் வேஷம் என்பது புரிந்துவிட்டதே!

இந்த இரண்டு பெண்களின் அய்யப்பன் கோவில் வழிபாட்டால் சந்நிதானம் தீட்டாகி' விட்டதாம்.

'பிராமணப் போஜனமாம்!'

உடனே பரிகாரம் - "தாந்தீரிக சமுச்சாயம்'' - சுத்திகரிப்பு செய்யவேண்டுமாம்!

புதிய சுத்திகரிப்பு மந்திர உச்சாடனத்தோடு முடி வதில்லை;  அதைவிட முக்கியம் "பிராமணர்களுக்கு போஜனம்.'' அவர்கள் சாப்பிட்டு மிஞ்சும் அவாளின்' மிச்சம் மீதி எச்சில் பருக்கைகள் - மற்ற (Leftover) வைகளை சந்நிதானத்தில் போட்டால் அது சுத்தமாகி' விடுமாம்!

அட மவுடீக மண்டூகங்களே, எச்சில் - பருக்கை அழுக்கை மீண்டும் சுத்தப்படுத்துவார்களா?

உள்ளே போய் தரிசனம் செய்தவர்களின் மூத்திரம், ரத்தம் இவைகள் கோவில் தரையில் சிந்தி அசுத்த மாகியிருக்குமாம்!  அதனால் அந்த "தீட்டை''க் கழிக்க, தூய்மைப்படுத்த இந்த தாந்தீரிக சமுச்சாயம்' என்பதை உடனே கடைப்பிடிக்கவேண்டுமாம்! அப்படிப் பார்க்கப் போனால் மற்ற பக்தர்கள் உடலில் மட்டும் மூத்திரம், ரத்தம் கிடையாதா? அவை சிந்தினால் பரவா யில்லையா?

தீட்டுக் கழிக்கும் சடங்கு முடிந்த நிலையில், பார்ப்பனர் களுக்குப் பிராமண போஜனம் செய்யப்பட்டதோடு, பட்டு அங்கவஸ்திரம், பட்டு வேட்டிகள் வழங்கப்பட்டதோடு, தங்கக் கவசம் பூட்டிய சங்குகளும் வழங்கப்பட்டன என்று நேரில் பார்த்த பக்தர் ஒருவர் முகநூலில் பதிவு செய்துள்ளதும் கவனிக்கத்தக்கதாகும்.

எது நடந்தாலும் பார்ப்பான் "வயிற்றில் அறுத்து'' வைக்கவேண்டும் - இதுதான் அர்த்தமுள்ள இந்து மதத்தின் ஆதார சுருதியாகும்.

பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை'' என்ப தற்கு இதைவிட மோசமான நிகழ்வு- அதுவும் 21 ஆம் நூற்றாண்டில் இப்படி ஒரு அசிங்கமா? அலங்கோல அருவருப்பா?

இதற்கு மூலாதார நூல் எதுவென்றால், 500 ஆண்டு களுக்குமுன் சென்னாஸ் நாராயணன் நம்பூதிரிபாடு என்ற கேரள பார்ப்பனர் எழுதி வைத்ததாம்!

'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏட்டின் படப்பிடிப்பு!

கேரளாவில் எந்தக் கோவில் தீட்டுப்பட்டாலும் இப்படித்தான் - இந்நூலில் உள்ளதுபோல - பிராமண போஜனம், பிராமண இலை மிச்ச எச்சில்களை கோவில்களில் போட்டு தீட்டு கழிப்பது என்ற சனாதன சம்பிரதாயம் நடந்து வருகிறதாம்.

ஆதாரம்: இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா' (Times of India) ஆங்கில நாளேடு பக்கம் 10. (ஆங்கில செய்தியின் மொழியாக்கத்தை 3 ஆம்  பக்கத்தில் வெளியிடுகிறோம் வாசகர்களின் சிந்தனைக்கு).

கேரளாபற்றி விவேகானந்தர்

கேரளத்தை ஒரு பைத்தியக்கார பூமி'' ‘‘Land of Lunatic Asylum'' என்று விவேகானந்தர் வர்ணித்ததை அப்படியே மாற்றாமல் வைத்திருப்பதுதான் பார்ப்பன - ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. - இந்துத்துவாவாதிகளின் கடமையா? பார்ப்பனச் சுரண்டல் ஆதிக்கம் ஜாம் ஜாம்'வென்று நடப்பதற்கு எதையும் செய்வார்கள்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தீட்டு''பற்றி அய்ந்து நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத அறியாமை என்று தெளிவாக்கப்பட்டுள்ளது!

அதை மீறி அந்த அர்ச்சகப் பார்ப்பான் கோவிலை இழுத்து மூடுவது சட்ட விரோதம் - உச்சநீதிமன்ற அவமதிப்புக் குற்றமல்லவா?

உச்சநீதிமன்றத் தீர்ப்பைமீறி கதவை சாத்திய அர்ச்சகர்மீது நடவடிக்கை தேவை!

அந்த அர்ச்சகனை வேலையை விட்டு நீக்கி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேரள அரசும், தேவசம் போர்டும் முன்வரவேண்டும்!

ஏற்கெனவே பல மனுக்கள் - மறுசீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளபோது, ஸ்டே' ஏதும் தராத நிலையில், எப்படி கோவில் மூடப்பட்டது?

கடும் நடவடிக்கை தேவை - பார்ப்பன வல்லாண்மை எப்படி தலைவிரித்து ஆடுகிறது கேரளத்தில் பார்த்தீர்களா?

முற்போக்காளர்கள் அனைவரும் இணைந்து இதைக் கண்டிக்க ஒன்று திரளவேண்டும்!  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

click me!