செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம்- 3வது நீதிபதி பரபரப்பு உத்தரவு

By Ajmal Khan  |  First Published Jul 14, 2023, 3:47 PM IST

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் எனவும் அதற்கு செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என 3வது நீதிபதி உத்தரவிட்டார்.


செந்தில் பாலாஜி கைது வழக்கு

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து இந்த  வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். 

Latest Videos

undefined

3 நாட்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை அனைத்து தரப்பு வாதங்களோடு இன்று மதியம் முடிவடைந்தது. இதனையடுத்து நீதிபதி தனது தீர்ப்பில் கைது காரணங்களை செந்தில் பாலாஜி பெற மறுத்து விட்டு, தரவில்லை என முன்வைத்த வாதம் நிராகரிக்கப்படுகிறது. அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் உள்ளது என்றால் காவலில் எடுத்து விசாரிப்பதும் அனுமதிக்கத்தக்கது என கூறினார். 

3வது நீதிபதி தீர்ப்பு

அமலாக்க துறை, காவல் துறை அதிகாரிகள் அல்ல என்றாலும் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரமில்லை என உச்ச நீதிமன்றம் கூறவில்லை என குறிப்பிட்ட நீதிபதி,  தான் அப்பாவி என நிரூபிக்க குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிமை உள்ளதாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது எனவும் எனவே செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மருத்துவமனை சிகிச்சை காலத்தை முதல் 15 நாள் நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? கூடாதா என்பதை பொறுத்தவரை,

சட்டப்படி முதல் 15 நாட்களில் காவலில் எடுக்க வேண்டும். காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்த போதும்,  அவரை காவலில் எடுக்க அமலாக்கத் துறை முயற்சிக்கவில்லை. செந்தில் பாலாஜியின் உடல் நிலை சாதகமாக இல்லாததால் காவலில் எடுக்கவில்லை என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார். 

அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்த நீதிபதி

இதனையடுத்து செந்தில்பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே நீதிபதி பரத சக்ரவர்த்தி வழங்கிய தீர்ப்பைதான் ஏற்பதாக நீதிபதி கார்த்திகேயன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார். செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது தெரிந்தும் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்ததை ஏற்க முடியாது என்றும் நீதிபதி தனது கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜியின் சகோதாரர் தனக்கும் இருதய பகுதியில் பிரச்சனை என 4 வார கால அவகாசம் கேட்கிறார்- அமலாக்கத்துறை

click me!