முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, மக்கள் வரிப்பணத்தில் நினைவு சின்னம் வைக்காமல், தங்கள் சொந்த செலவில் எத்தனை நினைவு சின்னங்கள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் தலைமையில் ஆலோசனை
அதிமுக பொன்விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில், வீர வரலாற்றின் பொன்விழா எனும் பெயரில் எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து செய்வதற்கு ஏதுவாக 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகள் தொடர்பாக குழுக்களின் உறுப்பினர்களுடன் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அப்போது மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டிற்காக மாநாட்டின் மேடை மற்றும் முகப்புக்காக, டெல்லி செங்கோட்டை, செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, நாடாளுமன்றம், போன்ற வடிவங்களில் அமைக்கப்பட்ட மாதிரிகள் கொண்டு வரப்பட்டது. அதனை எடப்பாடி பழனிசாமி உட்பட குழு உறுப்பினர்கள் பார்த்து இறுதி செய்தனர்.
கலைஞர் பெயரில் நூலகம் ஏன்.?
ஆலோசனை கூட்டம் முடிந்தப்பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கருணாநிதி நினைவிடம் தொடர்பான வழக்கின் போது , திமுக வழக்கறிஞர் வில்சன் கடலுக்குள் எந்த கட்டிடமும் கட்ட மாட்டோம் என உத்தரவாதம் அளித்திருந்ததாக கூறிய அவர், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவரும் சூழலில், பேனா நினைவு சின்னத்துக்காக 81 கோடி ரூபாயை கடலில் கொட்டுவது தேவையற்றது என கூறினார்.
மதுரை நூலகத்துக்கு திருவள்ளுவர் பெயரை வைத்திருக்கலாம் அல்லது எத்தனையோ தமிழ் அறிஞர்கள் உள்ள போது ஏன் மதுரை நூலகத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டது என கேள்வி எழுப்பிய அவர், கருணாநிதிக்கு மக்கள் வரிப்பணத்தில் நினைவு சின்னங்களை வைக்காமல் சொந்த செலவில் எத்தனை சின்னங்களை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும் என ஜெயக்குமார் கூறினார்.
இதையும் படியுங்கள்