
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு முதல்நாள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார். அந்த வீடியோவை வெற்றிவேலின் வழக்கறிஞர்கள் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக்கமிஷனிடம் ஒப்படைத்தனர்.
தமிழக அரசின் உத்தரவுப்படி ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன், விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல் மற்றும் ஆதாரங்களை வைத்திருப்போர் ஒப்படைக்கலாம் என, விசாரணை கமிஷன் அறிவித்திருந்தது. ஆனால், ஜெ., உடனிருந்த சசிகலா குடும்பம் சார்பில்,அது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
.இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முந்தைய நாள், தினகரன் ஆதரவாளரான, முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., 'ஜூஸ்' குடிப்பது போன்ற வீடியோ காட்சியை வெளியிட்டார்.இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விசாரணை கமிஷனில், வீடியோவை வழங்காமல், அவர் தன்னிச்சையாக வெளியிட்டது தொடர்பாக, விசாரணை கமிஷன் சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த வீடியோ நகல் மற்றும் வேறு ஆதாரங்கள் இருந்தால், அவற்றை ஒப்படைக்கும்படி, வெற்றிவேலுக்கு, விசாரணை கமிஷன் இரு நாட்களுக்கு முன், 'சம்மன்' அனுப்பப்பட்டது.
மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி ஜெ.வீடியோவை வெளியிட்டதால் அவர் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து தலைமறைவான வெற்றிவேல், வாக்கு எண்ணிக்கையின்போது கூட வெளியில் வரவில்லை.
இந்நிலையில் வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர்கள், விசாரணை கமிஷன் அலுவலகத்திற்கு வந்து, வீடியோ பதிவு செய்த சி.டி.,யை ஒப்படைத்தனர்.