
இனி வரும் காலங்களில் திமுக எந்த தேர்தலிலும் வெற்றி பெறாது என்றும், 'இந்த' செயல் தலைவர் இருக்கும் வரைக்கும் அதற்கான வாய்ப்பே இல்லை என்றும் திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்பாளரான மு.க.அழகிரி கூறியுள்ளார்.
டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக உள்ளனர். தினகரனின் இந்த வெற்றியை அடுத்து அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் 29 ஆம் தேதி டிடிவி தினகரன் பதவியேற்க உள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அதிமுகவைவிட 50 சதவீத வாக்குகள் பெற்று தினகரன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதிமுக இரண்டாவது இடமும், மூன்றாவது இடத்தைப் பெற்ற திமுக, டெபாசிட்டையும் இழந்தது. இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுபோன்ற சூழலில் அழகிரி, கட்சியில் இருந்திருந்தால், திமுக வெற்றி பெற்றிருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகரில் திமுகவின் தோல்வி குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியிடம் வார இதழ் ஒன்று பேட்டி எடுத்தது. ஆர்.கே.நகரில், திமுகவின் தோல்வி மோசமான தோல்விதான். உண்மையான கட்சியினர் வேதனை அடைந்து வருகின்றனர்.
தேர்தலில் எந்த வேலையும் செய்யாமல் எப்படி வெற்றி பெற முடியும்? என்று கேள்வி எழுப்பினார். பணநாயகம் வென்று விட்டது; தேர்தல் ஆணையம் தோல்வியடைந்து விட்டது; குதிரைபேரம் என்றெல்லாம் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. கட்சியினரை ஒருங்கிணைத்து தேர்தல் பணியாற்ற தெரியவில்லை. தானாக வெற்றி வந்துவிடும் என்று நினைக்கிறார்கள்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்றில்லை... இனி எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறாது. இந்த செயல் தலைவர் இருக்கும் வரைக்கும் அதற்கான வாய்ப்பே இல்லை. தலைவர் ஆக்டிவாக இருந்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது. அவர் உடல் நலமில்லாமல் இருக்கிறார். கட்சியை நடத்துபவரின் பின்னால் விசுவாசமான நிர்வாகிகள் இல்லை. அதிமுக, மதிமுகவில் இருந்த வந்தவர்களுக்கு கட்சி பதவி கொடுத்துள்ளனர். இப்படி இருந்தால் எப்படி வெற்றி பெறும்? என்று அழகிரி கேள்வி எழுப்பினார்.