மாணவியை நன்கு படிக்க சொன்னதற்காக ஆசிரியர்களுக்கு ஜெயிலா.?? கள்ளக் குறிச்சி மாணவி வழக்கில் நீதிபதி ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 29, 2022, 7:01 PM IST
Highlights

மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிர்ஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 

மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிர்ஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் தனது உத்தரவில் அவர் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளியின் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறிவருகிறது, ஆனால் மாணவி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பெற்றோர்களும் உறவினர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதில் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் ஆசிரியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜாமீன் வழங்கிய நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த உத்தரவில் அதிரடித் தகவல்கள் இடம் பெற்றுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

இதையும் படியுங்கள்: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு… இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய  துரதிர்ஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  மாணவி நன்கு படிக்கவேண்டும் என்று கூறியதற்காக ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர், இது துரதிருஷ்டவசமானது, மாணவி தற்கொலை குறித்து கூட எந்த இடத்திலும் ஆசிரியர்கள் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக எழுதப்படவில்லை, அப்படியான ஆதாரங்கள் ஏதுமில்லை, மாணவர்களை நன்கு படிக்க வேண்டும் என ஆசிரியர்கள் உத்தரவிடுவது ஆசிரியர் பணியில் ஒரு அங்கம், ஆனால்  மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மனுதாரர்களுக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றச்சாட்டு பொருந்தாது என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் அதிகரித்துள்ள ரவுடிகள் தொல்லை...! தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்- உச்சநீதிமன்றம் மறுப்பு

படிப்பில் சிக்கலை சந்தித்ததில் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு நீதிமன்றம் வருத்தத்தை பதிவு செய்கிறது, எதிர் காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது என தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். இதேபோல ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கிருத்திகா ஆகியோர் நான்கு வாரங்களுக்கு சேலத்தில் தங்கியிருந்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் தினமும் காலை மாலை நேரங்களில் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், அதன் பின்னர் 4 வாரங்கள் சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு அழைக்கப்படும் போது நேரில் ஆஜராக வேண்டும்.

அதேபோல் பள்ளி தாளாளர் ரவிக்குமார் செயலாளர் சாந்தி முதல்வர் சிவசங்கரன் ஆகிய மூவறும் நான்கு வாரங்கள் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் தினமும் காலை மாலை நேரங்களில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், அதன் பின்னர் நான்கு வாரம் சிபிசிஐடி போலீசார் முன்பு காலை மாலை நேரங்களில் கையெழுத்திட வேண்டும் என்றும் விசாரணைக்கு அழைக்கும் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று  நீதிபதி தனது உத்தரவில் நிபர்ந்தனை வழங்கியுள்ளார். 
 

click me!