Jai bhim சாதிச் சண்டையை தூண்டி மதமாற்றம் செய்யவே ஜெய் பீம்... சூர்யா மீது ஹெச்.ராஜா பகீர் குற்றச்சாட்டு..!

By Thiraviaraj RMFirst Published Nov 15, 2021, 3:49 PM IST
Highlights

சண்டையை மூட்டி அதன் மூலம் மதமாற்றம் செய்யலாம் என்ற முக்கிய நோக்கத்தோடு எடுக்கப்பட்டது"  எனக் குற்றம்சாட்டியுள்ளார். 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 ‘ஜெய் பீம்’ படத்தில் பழங்குடி மக்களை சித்திரவதைப்படுத்தும் காவல்துறை அதிகாரி குருமூர்த்தி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் ஒரு காட்சியில் அவரது வீட்டில் வன்னியர் சங்கத்தின் காலண்டர் இடம்பெற்றிருப்பதாகவும் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனங்களை எழுப்பினர். அதன் பின் ‘ஜெய் பீம்’ படத்தின் காட்சியில் மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், ‘ஜெய் பீம்’ படம் குறித்து நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகள் கொண்ட கடிதம் எழுதினார். இதற்கு சூர்யாவும் அறிக்கை வாயிலாக பதிலளித்தார்.

 இந்நிலையில், ‘ஜெய் பீம்’ படம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் த.செ. ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கத்தின் சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம்" என கூறப்பட்டுள்ளது. மேலும் ரூ. 5 கோடி இழப்பீடு தர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதனிடையே நடிகர் சூர்யாவை பாராட்டி விசிக தலைவர் திருமாவளவன் சூர்யாவுக்கு கடிதம் எழுதினார். அதற்கு நன்றி தெரிவித்து சூர்யாவும் திருமாவளவனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது சூர்யா மீது பாமகவினருக்கு வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

 நிலவரம் இப்படி இருக்க, ஹெச்.ராஜா மேலும் ஒரு அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், ‘’ஜெய்பீம் படம் வன்னியர் சமுதாயத்திற்கும், பட்டியல் சமுதாயத்திற்கும்  இடையே சண்டையை மூட்டி அதன் மூலம் மதமாற்றம் செய்யலாம் என்ற முக்கிய நோக்கத்தோடு எடுக்கப்பட்டது"  எனக் குற்றம்சாட்டியுள்ளார். 

’’ருத்ர தாண்டவம், த்ரௌபதி படமெல்லாம் தமிழ்நாட்டில் ஓடாது. ஓடவும் இல்ல. 10.5% இட ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றம் சூடு குடுத்திருச்சி. இதை மடைமாத்திவுட ஜெய்பீம், மதமாற்றம் அப்டின்னு கொஞ்சநாளைக்கு உருட்டுவோம் இதைவிட்டா எங்களுக்கு வேற வழி இல்லாததால் அனைவரும் பொருத்தருள வேண்டுகிறோம்’’என பலரும் பாமகவுக்கு எதிராக கருத்துக் கூறி வருகின்றனர்.
 

click me!