Jai Bhim: சூர்யா உங்க அப்பனுக்கு அப்பனையே பாத்தவங்க நாங்க. வன்னியர்களுக்காக கொதிக்கும் வடஇந்திய சத்ரியர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Nov 22, 2021, 10:41 AM IST
Highlights

நான் மகி பால்சிங் மஹரான பேசுகிறேன், ஸ்ரீ ராஜ்புத் கர்ணா இயக்கத்தின் தேசிய தலைவராக இருந்து வருகிறேன், ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அந்த பெயரை ஒட்டிய அம்பேத்கருக்கும் அந்த திரைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது,

வன்னியர்களை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் நாங்கள் சென்னையை நோக்கி வருவோம் என ஸ்ரீ ராஜ்புத் கர்னா சேனா தலைவர் மகிபால்சிங் மஹரான எச்சரித்துள்ளார். தென்னிந்தியாவை சேர்ந்த வன்னியர்கள் அக்னி வம்சத்தைச் சார்ந்தவர்கள் நாங்களும் அதை அக்னி வம்சத்தில் சார்ந்தவர்கள், நாங்கள் உங்களுடைய அப்பனுக்கு அப்பனாக இருந்த பாலிவுட் திரைப்படத்தில் பன்சாலாவின் பத்மாவதி திரைப்படத்தை எதிர்த்தவர்கள். நாங்கள் அந்த படக்குழுவை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்தவர்கள் எனவே எனது கண்டனத்தை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையல் பாமகவின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வட இந்தியாவில் பிரபலமாக அமைப்புகளில் ஒன்றான ஸ்ரீ ராஜ்புத் கர்னா சேனா  நடிகர் சூர்யாவுக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளதுடன், சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த அமைப்பின் தலைவர் மகிபால் சிங் மஹாரானா எச்சரித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 

நான் மகி பால்சிங் மஹரான பேசுகிறேன், ஸ்ரீ ராஜ்புத் கர்ணா இயக்கத்தின் தேசிய தலைவராக இருந்து வருகிறேன், ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அந்த பெயரை ஒட்டிய அம்பேத்கருக்கும் அந்த திரைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, அந்த திரைப்படத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சுயசரிதை குறித்து எந்த இடத்திலும் பேசவில்லை, ஆனால் ஜெய்பீம் என்ற பெயரில் திரைப்படம்  வெளியாகி உள்ளது. திரைப்படத்தில் கதைக்கரு என்பது கடலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம், இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவத்தில் இருந்தவர்களின் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளது. 

ஆனால் அந்த திரைப்படத்தில் வில்லனாக வரும் அதாவது ஆதிவாசி எனப்படும் குறவர் இன மக்களை அடித்து துன்புறுத்தும் உதவி ஆய்வாளருக்கு ஜெ. குரு என பெயர்  வைக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவத்தில் அந்த உதவி ஆய்வாளரின் பெயர் என்பது அந்தோணிசாமி, அவர் ஒரு மதம் மாறிய கிறிஸ்தவர். ஆனால் அவருக்கு ஜெ . குருவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஜெ.குரு தென்னிந்தியாவில் ஒரு மாபெரும் மனிதர், அவர் சத்ரிய தலைவராக இருந்தவர், அவருடைய பெயர் இந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. இதற்காக நடிகர் சூர்யா அவர்களுக்கு நான் மாபெரும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் அக்னி சட்டியை பயன்படுத்தி ஒட்டுமொத்த வன்னிய குல சத்திரியர்களையும் அவமானப் படுத்தி இருக்கிறீர்கள். இதற்கும் நான் மாபெரும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தென் இந்தியாவைச் சேர்ந்த வன்னிய குல சத்திரியர்கள் அக்னி வம்சத்தைச் சார்ந்தவர்கள், நாங்களும் அக்னி குலத்தவர்கள். எங்களுடைய சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் படம் எடுத்துள்ள சூர்யா அவர்களுக்கு நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன் உங்களுடைய அப்பனுக்கு அப்பனாக இருந்த சஞ்சய் லீலா பன்சாலி அவர்களின்  பத்மாவதி திரைப்படம் வெளியானபோது திரைப் படத்தில் தவறான காட்சிகள் புகுத்தப்பட்டுள்ளது என்பதை கூறி, இந்தியா முழுக்க நாங்கள் போராட்டம் செய்தோம்.

அவர்களை மன்னிப்பும் கேட்க வைத்தோம், ஆனால் சத்ரியர்களை நீங்கள் தேவையில்லாமல் ஆதிவாசிகளுக்காக போராடிய ஷத்திரிய குலத்தை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளீர்கள். இதை நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும், திட்டமிட்டு ஷத்ரியர்களை அவமானப்படுத்த வேண்டும் என நீங்கள் திரைப்படத்தை இயக்கி இருந்தால், நாங்கள் கண்டிப்பாக சென்னையை நோக்கி வருவோம், அப்படி நாங்கள் வரும்போது பிரச்சினை பெரிதாகும் என அவர் எச்சரித்துள்ளார். உங்களுக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஜெய்பூர் வாய்ஸ் என்ற யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியொ..
 

click me!