Farm laws: போராட்டம் தொடரும்.. திட்டமிட்டபடி பேரணி.. பிரதமருக்கு அதிர்ச்சி கொடுத்த விவசாயிகள்.!

By vinoth kumarFirst Published Nov 22, 2021, 9:12 AM IST
Highlights

 நவம்பர் 29 அன்று மழைக் காலக் கூட்டத் தொடர் தொடங்கும் நாளில், நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் பேரணியாகச் சென்று திட்டமிட்டப்படி முற்றுகை போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ள மத்திய அரசை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

டெல்லியில் வருகின்ற நவம்பர் 29ம் தேதி திட்டமிட்டபடி நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். 

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது. இது பெரும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் சிறு குறு விவசாயிகளுக்கு பாதகமாக இருப்பதாகவும் கூறி மழை, வெயில், பனி, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட எவைகளையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் டெல்லியின் புறகநகர் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்ந்து போாரட்டம் நடத்தி  வருகின்றனர். இந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.  விவசாயிகளுடன் பல்வேறு சுற்றுப் பேச்சுவாரத்தைகளை மத்திய அரசு நடத்தியும் எந்தத்தீர்வும்  எட்டப்படவில்லை. 

கடந்த நவம்பர் 19ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக அறிவித்தார். மேலும், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்கு செல்லுமாறும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், எங்களால் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை. விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் என பிரதமர் மோடி கூறினார். நாடு முழுவதிலும் இருந்து இதற்கு வரவேற்பு கிடைத்த நிலையில், விவசாயிகளின் போராட்டம் வாபஸ் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் இந்த வாபஸ் தொடர்பான மசோதா நிறைவேறும் வரையில் வீடு திரும்பமாட்டோம், எங்களது போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அதோடு நவம்பர் 29ம் தேதி திட்டமிட்டபடி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். நவம்பர் 29ம் தேதி டிராக்டரில் அமைதியான முறையில் சென்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் திட்டமிடப்பட்டிருப்பதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று டெல்லி-அரியானா எல்லைப் பகுதியான சிங்குவில் சம்யுக்தா கிசான் மோர்சா சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்புத் தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில், பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பிற கோரிக்கைகளுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சம்யுக்தா கிசான் மோர்சா அமைப்பின் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால்;- விவசாயச் சட்டங்களை ரத்து செய்வது குறித்து ஆலோசித்தோம். அதன்பிறகு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைக்கு அரசு இதுவரை உரியப் பதில் வழங்கவில்லை. வரும் 22ஆம் தேதி லக்னோவில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெறும். அதைத்தொடர்ந்து 26ஆம் தேதி அனைத்து எல்லைகளிலும் கூட்டங்கள் நடத்தப்படும். நவம்பர் 29 அன்று மழைக் காலக் கூட்டத் தொடர் தொடங்கும் நாளில், நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் பேரணியாகச் சென்று திட்டமிட்டப்படி முற்றுகை போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ள மத்திய அரசை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

click me!