
திருச்சியில் பணத்தை கொடுத்து கூட்டத்தை கூட்டியவர் டிடிவி தினகரன் என்றும் அவரை பற்றிய ரகசியங்களை ஓ.பன்னீர்செல்வம் தாமதிக்காமல் உடனே வெளியிட வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நீட் தேர்வுக்கு எதிராகவும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் டிடிவி தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இது மற்ற அரசியல் தலைவர்களை திகைப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா இன்று அரியலூர் சென்றுள்ளார்.
அப்போது, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பணத்தை கொடுத்து கூட்டத்தை கூட்டியவர் டிடிவி தினகரன் என்றும் அவரை பற்றிய ரகசியங்களை ஓ.பன்னீர்செல்வம் தாமதிக்காமல் உடனே வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், மக்களின் வரிப் பணத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரயப்படுத்தி வருவதாகவும், பொதுக் கூட்டம் நடத்துவதற்கெல்லாம் எங்களிடம் பணம் கிடையாது எனவும் தெரிவித்தார்.