
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 13 பொது மக்கள் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்தும் கூட, தமிழக முதல்வர் அந்த சம்பவ இடத்துக்கு வராதது ஏன்? என பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. இப்போது அங்கு செல்வது சட்ட மீறல் அதனால் தான் அங்கு செல்லவில்லை. என ஏதேதோ காரணங்கள் கூறி சமாளித்தார் முதல்வர்.
அதன் பிறகு நேற்று தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் சில அதிமுக அமைச்சர்கள், தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசினர். அந்த சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சில பல காரணங்களை கூறி பத்திரிக்கையாளர்களை வெளியிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து கூறிய அதிமுக ஐடி விங் செயலாளர் ஹரி பிரபாகரன், தனது டிவிட்டர் பக்கத்தில் பத்திரிக்கையாளர்களை மிக கேவலமாக விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில் ”மருத்துவமனைக்குள் துணை முதல்வர் இருக்கும்போது பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்க முடியாது. உள்ளே அனுமதிக்கப்படுவதற்கு பதிலாக, பிஸ்கட்டுக்கு குலைக்கும் தெரு நாய்கள் கேட்டில் கட்டி வைக்கப்படுவார்கள்'' என அதில் அவர் கூறியிருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதனை தொடர்ந்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கி இருக்கிறது அதிமுக.
இதனால் அந்த ட்வீட்டை நீக்கிய அவர் பின்வருமாறு ஒரு பதிவை இப்போது வெளியிட்டிருக்கிறார்” டிவிட்டரில் நான் வெளியிட்டது எனது சொந்த கருத்து மட்டுமே. அதற்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கட்சியின் கருத்துக்களை கூறும் உரிமையும் எனக்கு இல்லை. இன்று காலையில் நான் வெளியிட்டிருந்த ட்வீட்டால் சிலரின் மனம் புண்பட்டதாக அறிந்தேன்.
எனக்கு யார் மீதும் எந்த வன்மமும் இல்லை. எனது கருத்தால் மனம் புண்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார். இந்த ட்வீட்டில் ஒரு இடத்தில் கூட பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.