
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கொச்சை படுத்துவது முதலமைச்சருக்கு அழகல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ்சாடியுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. இதில் பல பெண்கள் சேர்ந்து மதுக்கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடி வருகின்றனர்.
அதன்படி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, காவல் அதிகாரி ஒருவர் பெண்கள் மீது தாக்குதல் நடத்தினார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு அந்த காவல் அதிகாரிக்கு பணி உயர்வு வழங்கியது.
இதைதொடர்ந்து, சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அதில் பெண்களை தாக்கிய போலிசாருக்கு பதவி உயர்வு கொடுத்தது குறித்து எதிர்கட்சிகள் கேள்விகள் எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றவை எனவும்இத்தகைய போராட்டங்களை பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து நடத்துவது ஃபேஷனாகி விட்டது என்று குற்றஞ்சாற்றினார்.
இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கமளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்துக்களில் பெரும்பாலானவை இட்டுக்கட்டிய பொய்கள் என தெரிவித்துள்ளார்.
கோபத்தைத் தூண்டும் வகையில் அங்கு எந்த நிகழ்வும் நடக்காத நிலையில் தடியடி நடத்த வேண்டிய அவசியம் என்ன? எனவும்,சாலையோரத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்த பெண்ணின் கன்னத்தில் அறைய வேண்டிய தேவை என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையெல்லாம் மறைத்து விட்டு, காவல்துறையினர் அமைதியின் திருவுருவமாக காட்சியளித்தது போன்றும் பொதுமக்கள் தான் அராஜகத்தில் ஈடுபட்டதைப் போலவும் சித்தரிப்பது முதலமைச்சரின் பதவிக்கு அழகல்ல என தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்களின், குறிப்பாக பெண்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாமல் மதுவிலக்கு கோரிக்கையாக இருந்தாலும், கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கிணறுகளை மூடும் கோரிக்கையாக இருந்தாலும் அதை அரசு நிறைவேற்ற வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.