மதுரையில் அதிமுக மாநாடு நடக்கவுள்ள ஆகஸ்ட் 20 ஆம் தேதி நீலகிரி கோடநாடு எஸ்டேட் முன்பு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓபிஎஸ்- இபிஎஸ் மோதல்
அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் சட்ட போராட்டம் நடத்திய நிலையில் சாதகமான தீர்ப்பு வராத காரணத்தால் டிடிவி தினகரனோடு இணைந்து எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து வருகிறார்.
இந்தநிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கை துரிதமாக விசாரிக்காத தமிழ்நாடு அரசை கண்டித்து கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் அணியினர் மற்றும் அமமுக இணைந்து ஆர்பாட்டம் நடத்தினர். தேனியில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து ஆர்பாட்டம் நடத்தினர்.
மாநாட்டுக்கு எதிராக ஓபிஎஸ் போராட்டம்.?
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக தூண்டுதலால் தான் ஓ.பி.எஸ் ஆர்பாட்டம் நடத்தியதாகவும், ஓ.பி.எஸ், டிடிவி கூட்டணி அச்சாணி இல்லாத வண்டி அது மூன்றடி கூட ஓடாது என விமர்சித்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அதிமுக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
சுமார் பத்து லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழலில், மாநாடு நடைபெறும் ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று கோடநாடு எஸ்டேட் முன்பு ஓ.பி.எஸ் ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருந்தபோதிலும் இது தொடர்பாக ஓ.பி.எஸ் அணி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.