அன்வர் ராஜாவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அன்வர் ராஜாவுக்கு எதிராக களமிறங்கினாலும், இந்த விஷயத்தில் ஓபிஎஸ் பிடிகொடுக்கவில்லை என்றும் அக்கட்சியில் சொல்லப்படுகிறது.
அதிமுகவில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் ஓபிஸ் - இபிஎஸ் என இரட்டைத் தலைமை கட்சியை வழிநடத்தி வந்தாலும், அக்கட்சியில் சலசலப்புகள் எழுவது வாடிக்கையாகிவிட்டது. கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் சில வேளைகளில் சர்ச்சையாகிவிடுகிறது. இன்னொரு பக்கம், ‘இனியும் நான் சும்மா இருக்க மாட்டேன்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சுற்றுப்பயணம், அறிக்கைகள் என்று அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டார் சசிகலா. இந்நிலையில் அண்மையில் முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான அன்வர்ராஜா பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் பேசியது அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
“சசிகலா அதிமுகவில் நுழைவது தொடர்பான பிரச்சனை எழுந்துள்ளதால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதிமுக கொடியை நாங்கள் மட்டுமல்ல அவர்களும் பிடிக்கலாம். யாரும் பிடிக்கலாம். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து” என்று அன்வர் ராஜா பேசியிருந்தது எடப்பாடி பழனிச்சாமி தரப்பைக் கோபப்படுத்தியது.
அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பூட்டு போட வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போதே எடப்பாடி பழனிச்சாமியிடம் அவருடைய ஆதரவாளர்கள் பொங்கியதாக அக்கட்சியில் பேசப்பட்டது. இந்நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும் அன்வர் ராஜாவும் பேசிய ஆடியோ வைரலானது. “சாதி, மதம் கடந்து சின்னம்மா (சசிகலா) தலைமையில் ஒற்றுமையாக அனைவரும் இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது. ஒற்றுமையாக இருந்திருந்தால் நாம் ஆட்சியை பிடித்திருக்கலாம்” என்று பேசி அதிமுக பிரமுகரிடம், “அப்படி ஆட்சியைப் பிடித்திருந்தால் எடப்பாடி தன்னை புரட்சித்தலைவர் என்றல்லவா சொல்லியிருப்பார்” என்று அன்வர் ராஜா விமர்சித்திருந்தார்.
ஏற்கெனவே சசிகலாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததால், அதிமுக வாட்ஸ்அப் குழுக்களில் அன்வர் ராஜாவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கொந்தளித்து வந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை நேரடியாக அன்வர் ராஜா டேமேஜ் செய்ததால், அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள், அவரை நெருக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கட்சிக்குள் ஆதரவு திரட்டி வருவதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன.
அதிமுக பிளவுப்பட்டபோது, சசிகலா அணியில் இருந்த அன்வர் ராஜா, அவர் சிறைக்கு சென்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளராக மாறினார். தற்போது அவர் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்துதான் அன்வர் ராஜாவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அன்வர் ராஜாவுக்கு எதிராக களமிறங்கினாலும், இந்த விஷயத்தில் ஓபிஎஸ் பிடிகொடுக்கவில்லை என்றும் அக்கட்சியில் சொல்லப்படுகிறது.
அதிமுகவை பொறுத்தவரை தற்போதும் எடப்பாடி பழனிச்சாமியின் கைதான் ஓங்கியிருக்கிறது. ஏற்கெனவே பெங்களூரு புகழேந்தியைக் கட்சியை விட்டு நீக்கும் விஷயத்திலும் ஓபிஎஸ் ஆர்வம் காட்டாமல்தான் இருந்தார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அழுத்தம் கொடுத்து, அவரை கட்சியை விட்டு நீக்கும் அறிக்கையில் ஓபிஎஸ்ஸிடம் கையெழுத்து பெற்றது. அதுபோலவே அன்வர் ராஜாவுக்கு எதிராகவும் விரைவில் அறிக்கை வெளியே வரும் என்று எடப்பாடி பழனிச்சாமி உறுதிப்பட பேசுகிறார்கள். மெய்யாலுமா?