மாளிகையை விட்டு வெளியே வாங்க.. பொற்பாதங்களை வெள்ளத்தில் எடுத்து வைங்க.. ஆளுநர் மீது ஜோதிமணி அட்டாக்!

By Asianet TamilFirst Published Nov 12, 2021, 10:33 PM IST
Highlights

குடியரசுத் தலைவர் மூலமாக மத்திய அரசிடம் தமிழகத்துக்கு இவ்வளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளது எனக் கூறி உடனடியாக தமிழகத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஆளுநர் ஏன் கேட்கக்கூடாது.

வெள்ளம் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் ஏன் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியில் வந்து தன்னுடைய பொற்பாதங்களை வெளியே எடுத்து வைத்து மக்களின் துயரத்தில் பங்கேற்கக் கூடாது என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். 

திருச்சி மணப்பாறையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கரூர் எம்.பி. ஜோதிமணி பாரவையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வெள்ளம் பாதித்த இடங்களில் மூத்த அமைச்சர்களைக் கொண்ட குழுவை அரசு அமைத்திருக்கிறது. அக்குழுவிடம் இழப்பீடு குறித்து விளக்கி கூறி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருவோம். தமிழக அரசின் நடவடிக்கை மிக சிறப்பாக உள்ளது. தமிழக முதல்வரும் அவருடைய தலைமையிலான நிர்வாகம், காவல்துறை மிக தீவிரமாக பணிகளை மேற்கொண்டதாலேயே வெள்ள பாதிப்புகளை கட்டுப்படுத்த முடிந்தது.

ஆனால், கணுக்கால் அளவு தண்ணீரில் பாஜகவினர் படகில் செல்கிறார்கள். மக்களுடைய துயரத்திலும்கூட பாஜகவினர் விளம்பரம் தேடுகிறார்கள். தமிழக வெள்ளம் குறித்து பிரதமர் மோடி தமிழக முதல்வரிடம் பேசியதை நாங்கள் வரவேற்கிறோம். வெள்ளப் பாதிப்புகள் குறித்து விளக்கிய முதல்வர், குறைந்தபட்சம் 2,000 கோடி ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால், இன்று வரை மத்திய அரசிடமிருந்து எந்த ஒரு நிதியும் வரவில்லை, அறிவிக்கப்படவும் இல்லை. தமிழகத்துக்கு வரவேண்டிய ஜிஎஸ்டிகூட நிலுவையில் உள்ளது. அதையும் தமிழகத்துக்கு உடனே வழங்க வேண்டும்.  தமிழகத்திற்கு தேவையான நிதியுடன் வெள்ள பாதிப்பு நிதியையும் மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். இதை நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வலியுறுத்தும்.

தமிழக அரசு இழப்பீடு எவ்வளவு என்று கணக்கிட்டு அதை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. இந்நேரத்துக்கு நிதி வந்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கக்கூடிய மத்திய ஆட்சி உள்ளது. உடனடியாக தமிழக மக்களுடைய துயரத்தில் பங்கேற்று மக்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் மத்திய அரசு இருக்க வேண்டும். இதில் தமிழக அரசோடு சேர்ந்து களத்தில் மத்திய அரசு நிற்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். மாநில அரசுக்கான அதிகாரங்கள் என்ன, ஆளுநருக்கான அதிகாரங்கள் என்ன என்பது அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் வரம்பு மீறி நடந்துகொள்வதை தமிழக அரசோ அரசியல் கட்சிகளோ தமிழக மக்களோ ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். 

தமிழ்நாடு வெள்ளத்தில் மிதந்துக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஏன் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியில் வந்து தன்னுடைய பொற்பாதங்களை வெளியே எடுத்து வைத்து மக்களின் துயரத்தில் பங்கேற்கக் கூடாது. குடியரசுத் தலைவர் மூலமாக மத்திய அரசிடம் தமிழகத்துக்கு இவ்வளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளது எனக் கூறி உடனடியாக தமிழகத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஆளுநர் ஏன் கேட்கக்கூடாது. மக்களின் பிரச்சினையை தமிழக அரசு மட்டும்தான் தோளில் சுமக்க வேண்டும் என்றால், ஆளுனர் அரசியல் மட்டுமே செய்வார் என்பதை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்” என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
 

click me!