மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போடுவதா.? உங்களை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.. தமிழக பாஜக ஆவேசம்!

By Asianet Tamil  |  First Published Jul 19, 2022, 10:40 PM IST

லஞ்சம், ஊழலை ஒழிக்க மனமில்லாத அரசு பழியை மத்திய அரசின் மீது போட்டு தப்பித்துக் கொள்ள பார்ப்பது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என்று மின் கட்டண உயர்வுக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 
 


தமிழகத்தில் மின்சார வாரியம் கடுமையான நிதி சுமையில் இருப்பதால் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. தற்போது மின் கட்டணத்தை உயர்த்தும் அறிவிப்பை அத்துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி பேசும்போது மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விளக்கியிருந்தார். “உதய் திட்டத்தில் அ.தி.மு.க அரசு கையெழுத்திட்டது. அதனால் மின் வாரியத்துக்கு நிதிச் சுமை ஏற்பட்டது. ஓராண்டில் மின் வாரியத்தை மேம்படுத்தி ரூ.2,200 கோடி வட்டி சேமிக்கப்பட்டது. என்றாலும் கடந்த 10 ஆண்டில் மின் துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது. 

இதையும் படிங்க: முதல்ல மாதாமாதம் மின் கணக்கெடுப்பு வாக்குறுதியை நிறைவேற்றுங்க.. மின் கட்டண உயர்வுக்கு சிபிஎம் அதிருப்தி!

Tap to resize

Latest Videos

இந்தக் கடும் நெருக்கடியில் இருக்கும்போது மத்திய அரசு தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக 28 முறை கடிதம் எழுதியிருக்கிறது. தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் கடன் ஏதும் வழங்கக்கூடாது என மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதனால்தான் பொதுமக்களுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குறைந்த அளவிலேயே மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.” என்று செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். மத்திய அரசின் அழுத்தத்தையும் மின் கட்ட உயர்வுக்கு ஒரு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெறுங்க.. அதிமுக சார்பில் ஸ்டாலினை கேட்கும் ஓ. பன்னீர்செல்வம்!

இந்நிலையில் மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை அமைச்சர் செந்தில் பாலாஜி காரணம் காட்டி பேசியிருப்பதற்கு தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “லஞ்சம், ஊழல், முறைகேடுகள், நிர்வாக சீர்கேடு, முறையான திட்டமின்மை, மலிவு அரசியல் ஆகிய காரணங்களால் மின் உற்பத்தி, பகிர்மானம் மற்றும் விநியோகத்தை முறையாக செய்ய முடியாமல் மின் வாரியத்தையும், பகிர்மான கழகத்தையும் பெரும் நஷ்டத்தில் மூழ்க விட்டதற்கு பொறுப்பேற்க வேண்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய அரசின் நிர்பந்தத்தால்தான் மின் கட்டணத்தை உயர்த்துகிறோம் என்று கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நிர்வாக திறனற்ற நிலையில், லஞ்சம், ஊழலை ஒழிக்க மனமில்லாத அரசு பழியை மத்திய அரசின் மீது போட்டு தப்பித்துக் கொள்ள பார்ப்பது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். மின்சாரத்தை சேமித்தால், அரசுக்கு லாபம். இல்லையேல் அரசியல்வாதிகளுக்கு லாபம் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. உண்மையில் மக்கள் மீது அக்கறையிருந்தால், மத்திய அரசின் ஆலோசனைகளை, வழிகாட்டுதல்களை பின்பற்றி நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்துவதில், முனைப்புக் காட்டுங்கள். அதை விடுத்து மத்திய அரசின் மீது விமர்சனம் செய்துவிட்டால் மக்கள் உங்களின் தவறுகளை மன்னித்து விடுவார்கள் என்று எண்ணாதீர்கள்" என்று அறிக்கையில் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுகவில் உருவாகப் போவது ஏக்நாத் ஷிண்டேவா, சந்திரபாபு நாயுடுவா..? ஹெச். ராஜாவுக்கு வந்த ஆசை.!

click me!