IRCTC: ரயில்வே இணையதள முன்பதிவில் சமஸ்கிருதம் திணிப்பு… குறட்டை விடும் தமிழக அரசியல் கட்சிகள்

By manimegalai aFirst Published Dec 7, 2021, 8:36 PM IST
Highlights

ரயில்வே இணையதள முன்பதிவு விண்ணப்பத்தில் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டுள்ள விவரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை: ரயில்வே இணையதள முன்பதிவு விண்ணப்பத்தில் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டுள்ள விவரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்துக்கு என்று தனித்த அடையாளம் இன்று வரை இருக்கிறது. மொழிக்காகவும், இனத்துக்காகவும் பாடுபட்டு உயிர் நீத்த தியாகிகள் ஏராளம். செம்மொழியாம் தமிழ் மொழி என்று இப்பவும் மார்தட்டிக் கொண்டு வலம் வரும் அரசியல் கட்சிகள் ஏராளம்.

குறிப்பாக இந்தி திணிப்பை எதிர்கொண்டு இன்னமும் அரசியல் செய்யும் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் இப்போது சமஸ்கிருதத்துக்கு எதிராக போராட வேண்டிய சூழலும், போக்கும் நிலவி வருவதாக தெரிகிறது. இதற்கு இப்போது கட்டியம் கூறுவது போல, ஐஆர்சிடிசி முன்பதிவு விண்ணப்பத்தில் சமஸ்கிருத வார்த்தை சேர்க்கப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு DRM Chennai மண்டலத்தின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டு இருந்தது. அதாவது மாற்று திறனாளிகள் தினத்தை பற்றிய ஒரு செய்தி பதிவிடப்பட்டு இருந்தது. அதில் உலக மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட ரயில்களில் மாற்று திறனாளிகளுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டதாக ஒரு பதிவு வெளியிடப்பட்டு உள்ளது.

அதில் திவ்யங்ஜன் (divyanjan) என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது அந்த பதிவில் facilities for differently abled என்று வாக்கியத்தை பயன்படுத்துவதை சாமர்த்தியமாக தவிர்த்துவிட்டு அதற்கு மாற்றாக facilities for divyangjan என்ற வாக்கியம் பிரயோகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த பதிவு இப்போது மெல்ல, மெல்ல இணைய உலகம் வாயிலாக வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. இது வலிந்து திணிக்கும் முயற்சி, சமஸ்கிருதத்தை உள்ளே நுழைக்க மத்திய அரசு எடுக்கும் புதிய வழிமுறை என்றும் பேச்சுகள் எழ ஆரம்பித்து உள்ளன.

பொதுவாக புரிந்து கொள்ளுதல் என்ற அடிப்படையில் ஆங்கிலத்தில் அனைத்து விஷயங்களையும் பதிவிட்டு விட்டுவிட்டு differently abled என்ற வார்த்தைக்கு பதிலாக சமஸ்கிருதத்தை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்து இருக்கின்றன.

சமஸ்கிருதத்தை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் வலிந்து திணிக்கும் போக்கு எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. ரயில்வே துறையில் இந்த திவ்யங்ஜன் (divyangjan) பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற விவரமும் இப்போது வெளியாகி உள்ளது.

இந்திய ரயில்வே இணையதள முன்பதிவு இந்த வார்த்தை மிக தெளிவாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.

ஐஆர்சிடிசி இணைய தள முன்பதிவை நாம் கூகுள் செய்தோம் என்றால் அதில் வழக்கமாக செல்லும் ஊர்கள், தேதி, பயணிகள் யார் என விவரங்கள் கேட்கப்படும். அந்த பகுதியில் பெண்கள், கீழ் இருக்கை அல்லது மூத்தோர் இருக்கை என்பதற்கு அடுத்ததாக divyaang என்ற பிரிவு குறிப்பிடப்பட்டு உள்ளது.

மற்ற பிரிவுகள் எல்லாம் ஆங்கிலத்தில் பயன்படுத்திவிட்டு எளிதில் யாராலும் கவனிக்கப்படாது என்று அறிந்தே இப்படி சமஸ்கிருத வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பொதுவான மொழியில் அதுவும் communication language என்ற அடிப்படையில் மற்ற பிரிவுகளுக்கு ஆங்கில வார்த்தையை பயன்படுத்திவிட்டு இந்த ஒரு வார்த்தையை மட்டும் சமஸ்கிருதத்தில் பிரசுரிப்பது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த வார்த்தைக்கு ஈடாக அல்லது பொருளாக்கம் செய்யும் ஆங்கிலத்தில் வேறு வார்த்தைகளே இல்லையா? சமஸ்கிருத திணிப்பு என்பதை தவிர வேறு என்ன உள்நோக்கம் இருக்க முடியும் என்று இணையவாசிகள் கேள்விகளை போட்டு தாக்கி வருகின்றனர்.

ஆனால்… வெகுஜனங்களில் உள்ளக்குமுறல் இப்படி இருக்க மொழிக்காக துடித்துக் கொண்டு இருக்கும் திமுக, அதிமுக, மதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை மவுனமாக இருப்பது ஏன் என்றும் நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். சமஸ்கிருதம் எந்த வழியிலும் உள்ளே வரவிட மாட்டோம் என்பது மார் தட்டும் அரசியல்வாதிகளும் இனியாவது விழித்துக் கொள்வார்களா? என்பதே மொழியியல் அறிஞர்களின் ஆக பெரும் கேள்வியாக உள்ளது…!!

click me!