சித்தாந்தம் சரிந்ததால் செல்வாக்கு சரிந்ததா? கொங்கு மண்டலத்தில் இழந்ததை மீட்க முயலும் கம்யூனிஸ்டுகள்... 

Asianet News Tamil  
Published : Jun 02, 2017, 12:52 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
சித்தாந்தம் சரிந்ததால் செல்வாக்கு சரிந்ததா? கொங்கு மண்டலத்தில் இழந்ததை மீட்க முயலும் கம்யூனிஸ்டுகள்... 

சுருக்கம்

Influenced by the collapse of Communist ideology at Kongu zone

தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் வலுவாக காலூன்றிய இடங்களை நெருக்கமாக கவனித்தால் அவை தொழிற்சாலைகள்  அதிகமிருக்கும் பகுதிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதிகளாக இருக்கும். 

கோவை, திருப்பூர் போன்ற தொழிற்சாலைகள், பனியன் கம்பெனிகள் நிறைந்த மேற்கு மாவட்டங்களில் கம்யூனிஸ்டுகளுக்கு வலு அதிகமிருந்தது. அதேபோல் விவசாயமே முதற் தொழிலாக இருக்கும் டெல்டா பகுதிகளிலும் இவர்களுக்கு ஆதரவு அதிகமிருந்தது. காரணம்? தொழிலாளர்கள் மற்றும் கூலியாட்கள் தொடர்பான உரிமைப் பிரச்னைகள், அடக்குமுறைகள் அதிகம் வெடிக்கும் என்பதால் அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கடமையுணர்வுடன் இந்த பகுதிகளை அதிகம் குறிவைத்து களமிறங்கினர் கம்யூனிஸ தலைவர்கள். 

கடந்த கால தேர்தல்களில் இரு பெரும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களை அள்ளிக் கொடுத்ததும் இந்த மண்டலங்கள்தான். ஆனால் சமீப சில ஆண்டுகளாக சூழல் மாறிவிட்டது. கொங்கு மண்டலத்தில் கம்யூனிஸ்டுகளின் அடர்த்தி அதிகமிருந்த பகுதிகளை அ.தி.மு.க.வும், டெல்டாவில் அடர்த்தி அதிகமிருந்த பகுதிகளை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டு கட்சிகளும் குறிவைத்து ஆக்கிரமித்தன. 

இதில் மிக மோசமான இழப்பை சந்தித்த கம்யூனிஸ்டுகளுக்கு இந்த பகுதிகளில் எம்.எல்.ஏ.க்களே இல்லாத அவல சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் தாங்கள் இழந்த பகுதிகளில் செல்வாக்கை மீட்டெடுக்கும் நோக்கில் மீண்டும் முயற்சிகளை துவக்கியுள்ளன கம்யூனிச இயக்கங்கள். குறிப்பாக கொங்கு மண்டலத்தை பிரதானப்படுத்தி பணிகளை துவக்கியுள்ளன. 

ஜூன் 1 மற்றும் 2 தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழுக்கூட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு  உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநிலசெயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்று வருகின்றனர். இதில் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, அதை எதிர்க்கும் நடவடிக்கைகளை  ஆலோசிக்கும் அதே வேளையில் மாநிலத்தில் தேர்தல் அரசியலை நோக்கி கட்சியை வளர்க்கும் வழிகளையும் ஆராய்ந்து ஆலோசித்து வருவதாக தகவல். 

மார்க்சிஸ்ட் இப்படி களமிறங்கிவிட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்டும் கோவையில் தன் மாநில பொதுக்குவை கூட்டுகிறது. வரும் 7 மற்றும் 8 தேதிகளில் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள். சி.பி.ஐ.யும் இதே போல் இயக்கத்தை இம்மண்ணில் மீட்டெடுப்பதை பற்றி அலச போகிறது. 

ஆக இப்படி இரு கம்யூனிஸ இயக்கங்களும் போட்டி போட்டுக் கொண்டு கொங்கில் தங்கள் செல்வாக்கை மீட்டெடுக்கும் முயற்சியில் குதித்திருக்க, அரசியல் விமர்சகர்களோ ‘கம்யூனிஸ்டுகள் மக்கள் மத்தியில் தாங்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முயற்சிக்கும் முன், தங்களுக்குள் தாங்கள் இழந்த கம்யூனிஸ சித்தாந்தத்தை முதலில் மீட்டெடுக்க வேண்டும். கால ஓட்டத்துக்கு ஏற்பட் காம்ரேடுகளின் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது. அது தவறில்லை. ஆனால் தங்கள் சித்தாந்தத்தையும் அவர்கள் நாகரிகத்திடம் தொலைத்துவிட்டதுதான் பிரச்னையே.’ என்று தாளித்து தள்ளியுள்ளனர். 
கம்யூனிஸ்டுகள் சிந்திப்பார்களா!                        

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!