
மதுபானங்களின் விலையை ஏற்றியதன் மூலம் மதுவிலக்கு சாத்தியமில்லை என்பதை தமிழக அரசு உணர்த்தியுள்ளது என்று கூறியுள்ளார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டெங்கு குறித்து பேசினார். தமிழகம் முழுவதும் திமுக எம்எல்ஏக்கள் டெங்கு பாதிப்பு குறித்து மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர் என்று கூறிய ஸ்டாலின், இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தி
ல் மதுபான விலை ஏற்றம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, மதுவிலக்கு சாத்தியமில்லை என்பதை, மது விலையை ஏற்றி அரசு காட்டியிருக்கிறது என்று கூறினார்.
தமிழகத்தில் மது விலக்குக்காக போராட்டங்கள் பல நடைபெற்று வந்தன. அதிமுக.,வின் சென்ற ஆட்சியின் போது, பெண்கள் பலர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் தனிப்பட்ட முறையில் அவர் சென்ற இடங்களில் எல்லாம் கூடி கோரிக்கை விடுத்தனர். ஆனால் அப்போதும் சரி மதுவிலக்கு குறித்த எந்த முக்கிய நகர்வும் அரசால் செய்யப்படவில்லை.
நீதிமன்றத்தில் அதிரடி உத்தரவால் நெடுஞ்சாலையை ஒட்டிய டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. இதனால், சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டு, அவை ஊருக்குள் திறக்கப்பட்டன. அவ்வாறு தங்கள் ஊர்களுக்குள் குடியிருப்புப் பகுதிக்குள் திறக்கப்படும் கடைகளை எதிர்த்து உள்ளூர் மக்கள், குறிப்பாக பெண்கள் பெரும் போராட்டங்களை பல இடங்களில் மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று குடிமகன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளது அரசு. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மதுபான விலையை ரூ. 12 வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுபானக் கடைகள் மூடப்பட்டதன் விளைவாக விற்பனை குறைந்து போன நிலையில், மாநில அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில்,
குவாட்டர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.12 வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பீர் விலையை பாட்டிலுக்கு ரூ.5 அதிகரிக்கவும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.