
தமிழக அமைச்சர்கள் எவரும் சசிகலாவை சந்தித்துப் பேசவில்லை என்று அடித்துச் சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.
கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நட ராஜனைப் பார்க்க பரோலில் வந்தார் சசிகலா. அந்தக் காரணத்தைக் குறிப்பிட்டே சசிகலாவுக்கு 5 நாள் பரோலும் வழங்கப்பட்டது. தனது 234 நாள் சிறை வாசத்துக்கு பின் அக்.5 ஆம் தேதி பரோலில் வந்த சசிகலாவில் பரோல் காலம் இன்று முடிவடைகிறது.
பரோல் காலத்தில் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதும், சசிகலா மறைமுகமாக அமைச்சர்கள் எட்டு பேரைச் சந்தித்து, கட்சி, ஆட்சி குறித்து விவாதித்ததாகக் கூறப் படுகிறது. இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இந்த செய்தியை முற்றிலும் மறுத்தார். சசிகலாவை அமைச்சர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக வந்த தகவல் தவறானது என்றும், அவரை தொடர்பு கொள்ளும் எண்ணம் அமைச்சர்கள் உள்ளிட்ட எவருக்கும் இல்லை என்றும் கூறினார்.
மேலும், குட்கா விவகாரத்தில், குற்றம் செய்ததற்கான முகாந்திரம் உள்ள 17 பேர் மீதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறிய அவர், ஊழலில் திளைத்த கட்சியான திமுக., இந்த அரசை விமர்சிக்க எந்தத் தகுதியும் பெற்றதில்லை என்றார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை எடுக்காமல், அரசு டெங்கு வந்த அரசாக உள்ளது என்று ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டை மறுத்த ஜெயக்குமார், டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், அரசின் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். அரசோடு பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால், டெங்கு இல்லாத தமிழகத்தை உருவாக்கலாம் என்று கூறினார்.
முன்னதாக, அமைச்சர்கள் சிலர் ரகசியமாக சசிகலாவை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக, செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரின் நடவடிக்கைகளும் அத்தகைய சந்தேகத்தை ஏற்படுத்தின. அமைச்சர்கள் மூன்று பேர் சாதாரண உடையில் சென்று சந்தித்ததாகவும், அவர்களை எடப்பாடி பழனிச்சாமி சமாதானப் படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
அப்படி அமைச்சர்கள் சந்தித்துப் பேசியதாக உறுதிப் படுத்தினால், அது பரோலில் வந்துள்ள சசிகலாவுக்கு பாதகமாக முடியும் என்பதால், அனைவரும் சேர்ந்து மூடி மறைப்பதாகவும் பரவலாக கருத்துகள் முன் வைக்கப் பட்டுள்ளன.