
அரசு பள்ளிகளுக்கு முட்டை, பருப்பு போன்ற உணவு பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் சார்ந்த 70 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குமாரசாமி என்பவர் நடத்திவரும் கிறிஸ்டி ஃப்ரிட்ஜ்கிராம் என்ற நிறுவனம், அரசு பள்ளிகளுக்கு முட்டை, பருப்பு ஆகிய உணவு பொருட்களை விநியோகம் செய்துவருகிறது. இந்த நிறுவனம் மட்டுமல்லாமல் மற்ற சில நிறுவனங்களும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு முட்டை, பருப்பு, சத்துமாவு ஆகிய உணவு பொருட்களை விநியோகம் செய்துவருகின்றன.
இந்நிலையில் குமாரசாமியின் திருவான்மியூர் இல்லம், அவரது நிறுவனம், அலுவலகங்கள், உணவு பொருட்களை விநியோகம் செய்யும் மற்ற நிறுவனங்கள், அவற்றின் அலுவலகங்கள் என சென்னை மற்றும் திருச்செங்கோட்டில் சுமார் 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிறுவனங்கள் மீது வரவு-செலவு கணக்கு விவரங்கள் தொடர்பான புகார் கிடைத்ததாகவும், அதையடுத்து ரகசியமாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மற்றும் திருச்செங்கோட்டில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் இல்லங்கள், அலுவலகங்கள் என 180க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த ஒரு மெகா ரெய்டாக இது அமையும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.