திமுக ஆட்சியில் திட்டங்கள், வாக்குறுதிகள் எல்லாம் வெறும் அறிவிப்புக்களோடு நின்றுவிடும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
திமுக ஆட்சியில் திட்டங்கள், வாக்குறுதிகள் எல்லாம் வெறும் அறிவிப்புக்களோடு நின்றுவிடும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் நிதியமைச்சர், திக்கி திணறி பட்ஜெட்டை வாசித்துக் கொண்டிருக்கும் போது, ஆளும் கட்சியின் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், அவர்களின் ஆட்சியை போலவே செயலற்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். இது போன்ற பட்ஜெட் மாடல் இதுவரை எங்கும் நடந்ததில்லை. திக்கி திணறி தடுமாறியது நிதியமைச்சர் மட்டுமல்ல, தமிழக அரசின் நிதி நிலைமையும் தான். தமிழகத்தின் நிதி நிலைமை தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நிதிப் பற்றாக்குறையால் மட்டுமல்ல, தமிழக அரசின் திறமையின்மையால், வருமானத்தை பெருக்குவதற்கான வழிவகைகளை ஆராயாமல், ஆக்கபூர்வமான வருமானத்தை பெருக்கும் ஆற்றல் இல்லாமல், ஆண்டுக்கு ஆண்டு டாஸ்மாக் விற்பனை மூலம் திரட்டப்படும் நிதியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். மதிப்பிற்குரிய தமிழக மக்களை எல்லாம் மதுவிற்கு அடிமை ஆக்கி, இந்த மாநிலம் சாதிக்க நினைக்கும் மகத்துவம் என்ன? ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாக மது விற்பனையை 45,000 கோடி ரூபாய்க்கும் மேல் உயர்த்தி இருப்பது தான் திமுக அரசின் சாதனை.
இதையும் படிங்க: உங்களுக்கு நீதி கிடைக்கும்! சத்யமேவ ஜெயதே! ராகுல் காந்திக்கு ஆதரவாக கமல் ட்வீட்
மது விற்பனையை மேலும் 50,000 கோடி ரூபாய்க்கு உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்பதை நாம் மிக ஆழமாக சிந்திக்க வேண்டும். தமிழக மக்களை எல்லாம் குடிகாரர்களாக மாற்றும், உடல் நலத்தை கெடுக்கும், மது விற்பனை அதிகரிப்பது என்பது ஒரு மாநில அரசு செய்யும் வேலையா? தமிழ்நாட்டில் மட்டும் தான் மிக விசித்திரமாக குடும்பத்தை கெடுக்கும் மது விற்பனையை அரசாங்கமும், அறிவுசார் கல்விக்கூடங்களை தனியார்களும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நிலுவையில் வைத்திருக்கும் திறனற்ற திமுக அரசு, தமிழக மக்களையெல்லாம் தவிப்புடன் காத்திருக்க வைத்துள்ளது. தமிழகத்தின் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறைவேற்றாமல் தமிழக அரசு காலம் கடத்தி வந்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேரத்தில் உளவுத்துறை மக்களின் கோபத்தை எடுத்துச் சொன்ன பிறகு இந்த பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்க போவதாக அறிவித்துள்ளது. ஆனால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை மறந்து தற்போது தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு என்ன தகுதி தேவைப்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை. இப்படி செய்வதால், தங்களுக்கு தேவையானவர்களுக்கு மட்டும் இந்த பணத்தை வழங்குவதற்கான ஊழல் நடைபெற வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: இறுதியில் நீதியே வெல்லும் என்று நம்புகிறேன்... ராகுலுடன் பேசியதற்கு பிறகு மு.க.ஸ்டாலின் டிவீட்!!
ஆகவே தமிழகத்தில் உள்ள இரண்டு கோடியே இருபது லட்சம் குடும்ப ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அதையும் கடந்த 28 மாத நிலுவை தொகையுடன் சேர்த்து, இம்மாதம் குடும்பத் தலைவிகளுக்கு 29 ஆயிரம் ரூபாயாக ஒரே தவணையில் வழங்க வேண்டும். தமிழகத்தின் நிதி நிலையை சீர் செய்வதற்காக, முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் சீன் டிரிஸ், பொருளாதார துறை முன்னாள் செயலர் நாராயணன், மற்றும் நோபல் பரிசு பெற்ற பெண்மணி எஸ்தர் டெஃப்லோ ஆகியோர் தமிழக அரசு நிதி ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஆலோசனை தந்தார்களா? அந்த ஆலோசனைககள் அரசால் ஏற்றுக் கொள்ளப்படவில்லையா? தற்போது அவர்கள் ஆலோசகர்களாக தொடர்கின்றார்களா? அல்லது அவர்களின் ஆலோசனைப்படித்தான் டாஸ்மாக் சாராய வியாபாரம் உயர்த்தப்படுகிறதா? அதாவது திமுக ஆட்சியில் திட்டங்களாகட்டும், வாக்குறுதிகளாகட்டும், எல்லாமே வெறும் அறிவிப்புக்களோடு நின்றுவிடும்.
இதையும் படிங்க: மக்களவையில் இருந்து ராகுல் காந்தியை நீக்குவதற்கு சபாநாயருக்கு அதிகாரம் இருக்கிறதா? சட்டம் என்ன சொல்கிறது?
அவை ஆவணங்களாக கூட மாறாது. திமுகவின் கவர்ச்சிகரமான மேடை அறிவிப்புகள், பத்திரிக்கை செய்திகளில் மட்டும் மின்னி விட்டு மறைந்து விடும். கடந்த 09.08.2021 அன்று நிதி அமைச்சர் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில் தமிழக அரசின் நிதி நிலைமையை விளக்கியிருந்தார். தமிழகத்தின் 2020-21 நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது. 2021 - 22ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கணக்கீட்டின்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ 5,70,189 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் உள்ளது” என்று திமுகவின் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இளைஞர் நலன், வேலைவாய்ப்பு, வேளாண்மை, நீர் பாசனம், தொழில் முன்னேற்றம், தனிநபர் வருமானம், வளர்ச்சி மற்றும் கட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு எந்தவிதமான உறுதியான திட்டங்களும் தமிழக அரசால் அறிவிக்கப்படவில்லை. பட்ஜெட்டில் நமது கடன் நிலை என்ன? வருமானம் எப்படி எல்லாம் மாறியுள்ளது? செலவினம் எப்படி எல்லாம் மாறியுள்ளது ஆகிய மூன்றும் மிக முக்கியமானவை. இது குறித்த விரிவான தகவல் பட்ஜெட்டில் இல்லை. பொதுத்துறை நிறுவனங்களான மின்வாரியம், போக்குவரத்து கழகம், குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ குடிநீர் வாரியம் போன்றவை எந்த நிலையில் உள்ளன என்பதையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இப்படி எதுவுமே செய்யாமல் நாடகம் போட்டு வாய்ச்சொல் வீரம் காட்டுவதன் மூலம், தமிழகத்தின் தள்ளாட்டத்தை நிறுத்த முடியாது. இதற்கு மேல் திறனற்ற திமுகவிடம் எதிர்பார்க்கவும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.