மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாகனம் தாக்கப்பட்ட வழக்கில் தேனி நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி வீடியோ கான்பரன்சிங் மூலம் சாட்சியம் அளித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2008 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு சென்றபோது அவருடைய வாகனம் சில சமூக விரோதிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கமுதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாகனம் தாக்கப்பட்ட போது நேரில் பார்த்த சாட்சிகளாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமரகுரு விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில் முக்கிய சாட்சியான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணை குறித்து சாட்சியம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தேவர் குருபூஜைக்கு சென்ற போது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் நேரில் பார்த்த சாட்சியம் என்றதால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி வீடியோ கண்காட்சி மூலம் சாட்சியம் அளித்ததாக தெரிவித்தார்.