2024-இல் பாஜகவுக்கு எதிராக எல்லோரும் ஒன்னுக்கூடணும்.. ஒவ்வொரு மாநிலமாக போகும் திருமாவளவன்.. ஆசை நிறைவேறுமா.?

By Asianet TamilFirst Published Nov 22, 2021, 8:33 AM IST
Highlights

"2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எல்லா கட்சிகளும் சேர்ந்து பாஜவை தனிமைப்படுத்த வேண்டும். பாஜவுக்கு எதிராக அனைத்து கட்சிகள் மட்டுமல்ல, அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும்."

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எல்லா கட்சிகளும் சேர்ந்து பாஜவை தனிமைப்படுத்த வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்க்கட்சிகள் ஆவலாக எதிர்பார்ட்து காத்திருக்கின்றன. தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை சரத்பவார், மம்தா பானர்ஜி ஆகியோர் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, மம்தா பானர்ஜி தன்னுடைய தலைமையில் கூட்டணியை உருவாக்கவும் முயற்சி செய்துவருகிறார். இதில் காங்கிரஸ் அலட்சியம் காட்டுவதால், மம்தா களமிறங்கியுள்ளார். இதற்காக கோவா, உ.பி, திரிபுரா உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் மம்தா கட்சி களமிறங்க உள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரி கூட்டணி உள்ளது.

இந்நிலையில் 2024-ஆம் ஆண்டில் அமைய உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாஜகவை எதிர்ப்பதில் எல்லா கட்சிகளும் உறுதியாக உள்ளன. வடக்கு, தெற்கு என அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி என பாஜவை எதிர்க்கும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன.2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எல்லா கட்சிகளும் சேர்ந்து பாஜவை தனிமைப்படுத்த வேண்டும். பாஜவுக்கு எதிராக அனைத்து கட்சிகள் மட்டுமல்ல, அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் விசிக இயங்குகிறது.

இதற்கு அச்சாணியாக பல்வேறு மாநில கட்சித் தலைவர்களை விசிக சந்திக்க உள்ளது. விவசாயிகளுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி நிபந்தனையின்றி திரும்ப பெற்றுள்ளார். இது விவசாயிகள் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி. தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நேரடியாக களமிறங்கி ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். போர்க்கால அடிப்படையில் செயல்பட்ட திமுக அரசை விசிக சார்பில் பாராட்டுகிறோம்.” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
 

click me!