
ஒரு வருடம் கடந்த நிலையில், டிவிட்டரில் மிக அதிகமான இந்தியர்கள் பின் தொடரும் பிரபல நபராக பிரதமர் மோடியே திகழ்கிறார்.
டிவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டு 51 சதவீதம் உயர்ந்துள்ளது.
சமூக வலைத் தளமான டிவிட்டர் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுடனும், தன்னைப் பின் தொடர்பவர்களுடனும் தன் எண்ணங்களை, கருத்துகளை, அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் டிவிட்டர் இந்தியாவின் இயக்குநர் தரண்ஜீத் சிங் டிவிட்டரில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள் குறித்த விவரத்தை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: 2017ஆம் ஆண்டில் டிவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 37.5 மில்லியனாக உள்ளது. இது இந்த ஆண்டில் 51 சதவீதம் அதிகம் ஆகும். இதன் மூலம் அவர் முதலிடத்தில் நீடித்திருக்கிறார்.
இதற்குக் காரணம் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தியது, செல்லாத நோட்டு ஒழிப்பு முதலாண்டு, மன் கி பாத் ஆகியவற்றில் மோடி மிகவும் துடிப்பாக கருத்துகளை வெளியிட்டதுதானாம்.
டிவிட்டர் இந்தியாவின் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்களில் சச்சின், விராட் கோலி, பிரியங்கா சோப்ரா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் உள்ளனர்.
2017 ஆம் ஆண்டின் அதிக சர்ச்சை மற்றும் விவாதத்திற்கு உள்ளான டிவிட் என்றால் அது, உச்ச நீதிமன்றத்தின் முத்தலாக் குறித்த தீர்ப்பு தானாம். ஆக.22ம் தேதி அந்த ஒரு நாள் மட்டும், 3,50,000 டிவீட்ஸ் இந்தத் தலைப்பில் விவாதிக்கப்பட்டதாம்.
இதற்கு அடுத்து ஜிஎஸ்டி குறித்த டிவிட், தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் கைதான விவகாரம், செல்லாத நோட்டு முதலாம் ஆண்டு ஆகியவை மிக அதிக கவனம் பெற்றவையாக இருந்துள்ளது.