
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்று சட்டவிரோத பேனர் வைத்தவர்களிடமே அதை அகற்றுவதற்கான செலவையும் சேர்த்து வசூலிக்க வேண்டும் என புதுச்சேரி மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பாஜகவின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் பாஜக- என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் முதல்முறையாக, ஒரு நாள் அரசு முறை பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வருகை தந்தார். அதில் பல்வேறு திட்டங்களைத் அவர் தொடங்கி வைத்தார். குறிப்பாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அரவிந்தரின் 150ஆவது ஆண்டு விழாவில் அமித்ஷா கலந்து கொண்டார்.
புதுச்சேரி பல்கலையில் 48 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள பல்வேறு கட்டிடங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அதேபோல் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். கிழக்கு கடற்கரை சாலையில் 20 கோடியில் புதிய பேருந்து நிலையம், குமரகுரு பள்ளத்தில் ரூபாய் 45 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்புகள், 30 கோடி புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கி வைத்தார். முன்னதாக அவரை வரவேற்பதற்காக பாஜக மற்றும் புதுச்சேரி மாநில அரசு தரப்பில் பல்வேறு ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்தது. அமித்ஷா அவர்களுக்கு புதுச்சேரியில் பயணிக்கும் சாலையில் வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் புதுச்சேரி கரிகாலம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர்களை எதிர்த்து வழக்கு தொடுத்தார்.
அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 24ஆம் தேதி புதுச்சேரி வந்தார். அப்போது அவரை வரவேற்று பல ஆயிரக் கணக்கான சட்டவிரோதமான பேனர்கள் நகரம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொது இடத்தில் பேனர் வைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடையையும் விதித்துள்ளது. சட்டவிரோத பேனர்களை அகற்ற வேண்டும் என்று ஏற்கனவே நகராட்சியிடம் அளிக்கப்பட்ட புகாரில், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புதுச்சேரியில் பேனர் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என குற்றஞ்சாட்டினார்.
அதேபோல் புதுச்சேரி நகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்ட விரோத பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாக கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சட்டவிரோம பேனர்கள் வைத்தவர்களிடமே அதை அகற்றுவதற்கான செலவை வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். அமித்ஷாவை வருகையின்போது பாஜகவினர் சார்பில் அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.